

தமிழகத்தின் வளமான, தொன்மையான கலாச்சார சின்னங்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை எனதெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கோயில் மற்றும் கோயில் நிலங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி தீர்ப்பாயம் அமைக்கவேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பாரம்பரியமிக்க கோயில்களைப் பாதுகாப்பது தொடர்பாக கடந்த 2015-ம்ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றம்தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டது. மேலும் இதுதொடர்பாக பல்வேறு பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் அறநிலையத் துறை தரப்பில், ‘‘தமிழகத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 121 கோயில்கள் உள்ளன. இதில் 8 ஆயிரத்து 450 கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இந்தக் கோயில்கள் புராதனக் கோயில்களாக கருதப்படுகின்றன. மொத்தம் உள்ள கோயில்களில் தற்போது 32 ஆயிரத்து 935 கோயில்கள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. 6 ஆயிரத்து 414 கோயில்களில் சிறிய அளவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 530 கோயில்கள் பாதி சிதிலமடைந்துள்ளன. 716 கோயில்கள் முழுமையாக சிதிலமடைந்து விட்டன. எஞ்சிய கோயில்களில் சீரமைப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ள வேண்டியுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கியஅமர்வு நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மனித பரிமாண வரலாறு, கலாச்சாரம், நம்பிக்கை, நடைமுறைகள், மரபுகள், முக்கிய இடங்கள் போன்றவை பல்வேறு நாடுகளில் தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தமிழகத்தில் பன்முகத்தன்மை கொண்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, 2 ஆயிரம்ஆண்டு பழமையான, தொன்மையான, பாரம்பரியமான கோயில்கள், அதன் சொத்துகள், சுவரோவியங்கள், களிமண் செங்கற்கள், சுண்ணாம்பு சின்னங்கள், விலைஉயர்ந்த ஆபரணங்கள், மூலிகைகளை பொக்கிஷமாகக் கருதி பாதுகாக்க வேண்டும்.
கலை மற்றும் இசையை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் படைப்புகள் எதிர்கால சந்ததியினருக்கான வரலாற்று ஆவணம். இந்த நிலத்தின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும்தொன்மையான புராதன சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமை.
தஞ்சை பெரிய கோயில் முதல்மாமல்லபுரத்து சிற்பங்கள் வரைஎண்ணிலடங்கா புராதன சின்னங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த இடங்களை நம் அதிகாரிகள் முறையாக பாதுகாக்கத் தவறி விட்டனர். அத்தகைய சூழல் இனியும் தொடரக் கூடாது. எனவே மாமல்லபுரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள புராதன சின்னங்களை பாதுகாக்க உடனடியாக பாரம்பரிய, கலாச்சார நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவின் அனுமதியின்றி எந்தவொரு மாறுதல்களையும் செய்யக்கூடாது.
அனைத்து கோயில்களின் பட்டியலை தயாரித்து கணினிமயமாக்கி, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். வாடகை பாக்கியை முழுமையாக வசூலிக்க வேண்டும். கோயில் சிலைகள், நகைகள் குறித்து பட்டியல் தயாரித்து 24 மணிநேர கண்காணிப்புடன் கூடிய பாதுகாப்பு அறை உருவாக்கி அதில் பாதுகாக்க வேண்டும். தகுதியான ஸ்தபதிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமிக்க வேண்டும். ஓதுவார்கள், அர்ச்சகர்களை கோயில்வாரியாக நியமித்துசீரமைப்புப் பணியை மேற்கொள்ள மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும். நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றைஇணைய தளங்களில் வெளியிட வேண்டும்.
அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காணவேண்டும். கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும். கோயில் நிலங்கள், கலை, கலாச்சாரம் மற்றும் கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்.
கோயில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். மத்திய சிலைகடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்கவேண்டும். கோயில் நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும். கோயில்நிலங்கள், சொத்துகளை திருடியவர்கள் மற்றும் சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பல்வேறு உத்தரவுகளை தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த உத்தரவுகளை 12 வாரகாலத்தில் அமல்படுத்தி அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு வலி யுறுத்தியுள்ளனர்.