Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM

தேசிய கல்விக் கொள்கையின் - தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டது மத்திய அரசு :

தேசிய கல்விக்கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், தற்போது அது தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய தேசியகல்விக் கொள்கையை உருவாக்கியது. பள்ளிக்கல்வியில் 10 2 என்பதற்கு பதில் 5 3 3 4 என்ற முறை அறிமுகம், தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, 6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி, தேசிய கல்வி ஆணையம், மும்மொழி கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தி, சம்ஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு, தொழிற்கல்வி அறிமுகம் போன்றவற்றை காரணம் காட்டி தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் கடந்த ஆண்டு ஜூலையில் தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

தொடக்கத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என மத்தியஅரசு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த சனிக்கிழமை மாநில மொழிகளில் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, காஷ்மீரி, ஒடியா, அசாமி, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, மணிப்பூரி, டோக்ரிஉள்பட 17 மாநில மொழிகளில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் அதிர்வலை

ஆனால், தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்படாதது தமிழகத்தில்அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை மத்திய கல்வி அமைச்சகம் தனது இணையதளத்தில் (https://www.education.gov.in/en/nep-languages-2020) வெளியிட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பின் உள்ளடக்கம் 155 பக்கங்களில் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x