

கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு, இருவரில் ஒருவரின் சாதி அடிப்படையில் சாதிச் சான்றிதழ் அளிக்கலாம் என தமிழகஅரசு மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
கடந்த 1975-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் படி, இரு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் உறுதிமொழிக்கடிதம் பெற்று, தந்தையின் அல்லது தாயின் சாதி அடிப்படையில் சாதிச்சான்றிதழ் வழங்கலாம். இந்த நடைமுறை தொடரும் நிலையில், தற்போது, கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அதிகளவிலான கோரிக்கைகள் அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன.
இவற்றை பரிசீலித்த அரசு,இரண்டு வெவ்வேறு சாதியைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு, பெற்றோரின் உறுதிமொழியை பெற்று தந்தை அல்லது தாயின் சாதி அடிப்படையில் சான்றிதழ் வழங்கலாம். மேலும்,பெற்றோரின் உறுதிமொழியின்படி, உரிய சாதிச் சான்றிதழை வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து வருவாய் நிர்வாகஆணையர் உரிய அறிவுறுத்தல்களை சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்கு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.