Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தல்

9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பதற்கான கூடுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல்தற்போது தணிந்துள்ள சூழலில், மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில்கொண்டு பள்ளிகளை படிப்படியாக திறக்க தமிழக அரசுமுடிவு செய்தது. முதல் கட்டமாக 10, 12-ம் வகுப்புகளுக்கு கடந்த ஜன.19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து 9, 11-ம் வகுப்புகளுக்கு பிப்.8-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்புக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்குபிப்.8-ம் தேதி முதல் பள்ளிகளைதிறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளில் தனி நபர் இடைவெளியை பின்பற்றும்போது வகுப்பறை வசதிகளைப் பொறுத்து செயல்பட கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி வகுப்பறையில் கூடுதல் இடவசதி இருப்பின்அதற்கேற்ப அதிக மாணவர்களைஅமரவைக்கலாம். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தனிநபர் இடைவெளியை பின்பற்ற போதிய வகுப்பறைகள், ஆசிரியர்கள் இருப்பின் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முழு வேளையாக பள்ளி இயங்கலாம்.

கூடுதல் வகுப்பறைகளுக்கு நூலகம், ஆய்வகம் உட்பட இதர கட்டிடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். சில பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்பட்டால் மாணவர்களை கூட்ட அரங்கம், பெரிய வகுப்பறையில் அமரவைத்து வகுப்புகளை நடத்தலாம்.மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில் ‘ஷிப்ட்’ முறையில் அல்லது ஒருநாள் விட்டுஒரு நாள் என சுழற்சி முறையில்வகுப்புகளை நடத்தலாம்.

‘ஷிப்ட்’ முறையில் காலை வகுப்புகள் முடிந்தவுடன் முறையாக கிருமிநாசினி கொண்டு வகுப்பறைகளை சுத்தம் செய்தபின் மாலைவகுப்புகளை தொடங்க வேண்டும். இதனுடன், தமிழக அரசு வெளியிட்டுள்ள கரோனா வழிகாட்டு விதிமுறைகளையும் முறையாக பின்பற்றவும் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x