Published : 31 Jan 2021 03:13 AM
Last Updated : 31 Jan 2021 03:13 AM
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே வீரமங்கலம் ஊராட்சி சின்னவீரமங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் 4 பேர் உட்பட6 பேர் கிராமத்து முறையிலான சமையல் செய்து, அதை யுடியூப்பில் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த வீடியோவைப் பார்த்த அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த 25-ம் தேதி கரூர் மாவட்டத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, இவர்களை பெத்தான்கோட்டை அருகே கொக்காட்டிப்பட்டிக்கு வரவழைத்து, அவர்களுடன் சமைத்து, உணவருந்தினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து சமையல் குழுவினரில் ஒருவரான முதுநிலை பட்டதாரி வி.சுப்பிரமணியன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
கடந்த 2014-ல் இருந்து 2 ஆண்டுகள் ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டு வந்தேன். அதில், போதிய வருமானம் இல்லாததால் அதை விட்டுவிட்டு, எனது சகோதரர்களான வி.முருகேசன், அய்யனார், உறவினர்கள் ஜி.தமிழ்செல்வன், டி.முத்துமாணிக்கம் ஆகியோருடன் பிழைப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டேன்.
5 பேரும் ஒரே நேரத்தில் செல்வதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சியை கைவிட்டோம். பின்னர், 2018-ல் யுடியூப் தொடங்கி எங்களது தாத்தாஎம்.பெரியதம்பி உதவியுடன் கிராமத்து சமையல் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்தோம். நாங்கள் செய்த ஈசல் வறுவல், வயல் நண்டு ரசம் போன்றவைபெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. அதன்பின் எங்கள் யுடியூப் சேனலின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
ஒருமுறை கரூர் எம்.பி ஜோதிமணியும் எங்களின் சமையலை யுடியூப்பில் பார்த்துவிட்டு நேரில் வந்து பாராட்டினார். பின்னர், கரூருக்கு ஜன.25-ம் தேதி வந்த ராகுல்காந்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்காக, அங்கு நாங்கள் காளான் பிரியாணி சமைத்துக் கொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்த ராகுல் காந்தியும் சமையல் செய்ய ஆர்வம் காட்டியதால், அவருடன் இணைந்து வெங்காய பச்சடி செய்தோம்.
நாங்கள் சமையல் செய்யும்போது பயன்படுத்தும் வார்த்தைகளின் உச்சரிப்பு நடையை அவர் அப்படியே பயன்படுத்தியதுடன், மறுமுறை வரும்போது ஈசல் சமையல் செய்துதர வேண்டும் என்று கூறியதால், அவரும் எங்களது யுடியூப் சேனலை பார்ப்பதை அறிந்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். அவர் எங்களிடம் மிகவும் எளிமையாக நடந்து கொண்டது வியப்பை ஏற்படுத்தியது என்றார்.
இதுகுறித்து கரூர் தொகுதிகாங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியிடம் கேட்டபோது, ‘‘புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைதொகுதிக்கு செல்லும்போது யுடியூப்பில் பிரபலமான அந்தசமையல் குழுவினரை சந்தித்துள்ளேன். இதுகுறித்து ராகுல்காந்தியிடம் தெரிவித்தபோது, அவர் ஏற்கெனவே அதுகுறித்து தனக்கு தெரியும் என கூறினார்.
இதையடுத்து, ஜன.25-ம் தேதிராகுல் காந்தி கரூர் மாவட்டத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்தபோது, நாங்கள் ஏற்பாடு செய்தபடி,கொக்காட்டிப்பட்டியில் சமையல் குழுவினர் அவருக்காக சமையல் செய்து வைத்திருந்தனர். அவர்களின் சமையலை ராகுல்காந்திருசித்து சாப்பிட்டு பாராட்டியதுடன், வெளிநாட்டிலும் அவர்களின் சமையலை பிரபலப்படுத்த ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT