பூலாம்வலசு சேவற்கட்டில் சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தியால் முதியவர் உயிரிழப்பு கடைசி நாள் போட்டி பாதியில் நிறுத்தம்

பூலாம்வலசு சேவற்கட்டில் சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தியால் முதியவர் உயிரிழப்பு கடைசி நாள் போட்டி பாதியில் நிறுத்தம்
Updated on
1 min read

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை யொட்டி சேவற்கட்டு விமரிசையாக நடைபெறும். கடந்த 2014-ல் நடந்த சேவல்கட்டின்போது 2 பேர் உயிரிழந்ததையடுத்து சேவற்கட்டு 4ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.

அதன்பின் 2019-ல் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சேவற்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு கடந்த 13-ம் தேதி தொடங்கி ஜன.15-ம் தேதி வரை போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கனமழை காரணமாக 14-ம் தேதி சேவற்கட்டு நடைபெறாததால், மேலும் ஒரு நாள் (நேற்று) சேவற்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

சேவல்களின் காலில் கத்தி கட்டக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும், அதையும் மீறி சேவல்களின் காலில் கத்தி கட்டி சண்டைக்கு விடப்பட்டன. ஆடுகளத்தில் கத்தி விற்பனை,கத்தி சாணை தீட்டுதல் போன்றவையும் நடைபெற்றன. கடந்த 13, 15-ம் தேதிகளில் நடைபெற்ற சேவற்கட்டில் சேவல்களின் காலில்கட்டப்பட்டிருந்த கத்தி பட்டதில் 19 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி நாள் போட்டியில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. விதிகளை மீறிசேவல் காலில் கட்டப்பட்ட கத்திப்பட்டு 27 பேர் காயமடைந்தனர்.

இதில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல்(65) என்பவரின் சேவல் போட்டியில் மோதவிடப்பட்டது. அந்த சேவல்பறந்தபோது, அதன் காலில்கட்டப்பட்டிருந்த கத்தி தங்கவேலின் தொடையில் பட்டதில், அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தங்கவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேவற்கட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in