

மக்கள் அனைவரும் சிக்கனமாக வாழ்ந்து, சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும் என்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உலக சிக்கனநாளில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையொட்டி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகள்:
முதல்வர் பழனிசாமி: சிக்கனம், சேமிப்பின் முக்கியத்துவத்தை மக்களிடம் உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அக்.30-ம் தேதி(இன்று) உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது. ‘சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்’ என்ற முதுமொழிக்கேற்ப ஒவ்வொரு மனிதனும் தன் உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயன்படும் வகையில் சேமிக்க வேண்டியது அவசியமாகும்.
எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு மக்கள் சிக்கனமாக வாழ்ந்து, தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தேசேமிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பதற்கேற்ப மக்கள் தாங்கள் ஈட்டிய பணத்தை அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சிறுக சிறுக சேமிக்கப்படும் அத்தொகை பன்மடங்காக பெருகிஎதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பை அளிக்கும். உலக சிக்கனநாளில், தமிழக மக்கள் அனைவரும்தங்கள் வாழ்வு வளம் பெற அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உலக சிக்கன நாளை முன்னிட்டு மனமார்ந்த மகிழ்ச்சி, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேவையற்ற செலவுகளை தவிர்த்து, சிக்கனமாக வாழ்ந்து, வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதையே இந்த நாள் வலியுறுத்துகிறது. மக்கள் கடின உழைப்பால் ஈட்டிய தங்கள் சேமிப்புத் தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் திரும்ப பெற முடியும். முக்கியமாக கருதப்படும் பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல் போன்ற அத்தியாவசிய செலவுகளை கடன் பெறாமல், சேமிப்பில் இருந்தே கவுரவமாக மேற்கொள்ள முடியும்.எனவே, தமிழக மக்கள் அனைவரும் அருகே உள்ள அஞ்சலகத்தில் பாதுகாப்பான அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் இன்றே முதலீடு செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.