

சென்னை: பல துறை கல்வி, ஆய்வு பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த புதிய கல்விக் கொள்கை மாநாட்டில் அமிதி பல்கலை. துணைவேந்தர் செல்வமூர்த்தி தெரிவித்தார்.
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய கல்விக் கொள்கை-2020 தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அமிதி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைப்பின் தலைவரும், சத்தீஷ்கர் அமிதி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான செல்வமூர்த்தி பேசியதாவது: பல்கலைக்கழகங்கள் புத்தாக்கலுக்கும், அறிவுக்குமான தொட்டில்களாக விளங்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதியனவற்றை உருவாக்க வேண்டும். தொழிற்துறையோடு கூட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய பொருட்களையும், சேவைகளையும் உருவாக்க வேண்டும். தற்போது இந்தியா உயர்கல்வியில் முன்னிலையில் உள்ளது.
2030-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 14 கோடி இளநிலை பட்டபடிப்பு மாணவர்கள் வெளியே வருவார்கள். உலகளவில் நான்கில் ஒரு பட்டதாரிகளை இந்தியா உருவாக்கும். இன்று இந்தியாவில 56 வகையான துறைகளில் 338 பில்லியன் அளவிலான 105 புத்தாக்கல் நிறுவனங்கள் உள்ளன. உலக நாடுகள் இந்தியாவுக்கு தங்களுடைய அறிவாற்றலை வழங்கவும், இந்தியாவோடு கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் தயாராகவுள்ளன. இவற்றை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள நாம் பலதுறை கல்வி மற்றும் ஆய்வு பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல் இயக்குநர் எம்.ஹனுமந்தராவ், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தரும், ஸ்ரீராமச்சந்திரா பல்கலையின் முன்னாள் ஆய்வுத்துறை தலைவருமான எஸ்.பி.தியாகராஜன், ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் உமாசேகர் ஆகியோரும் உரையாற்றினர். மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.