

இந்தோனேசியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
இந்தோனேசியாவின் ஈஸ்ட் நுஸா டெங்காரா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அடோனரா, மவ்மேர் உள்ளிட்ட பல தீவுகள் அமைந்துள்ளன. இந்நிலையில், மவ்மேர் தீவு அமைந்திருக்கும் ஃப்ளோர்ஸ் கடற்பகுதியில் சுமார் 100 கிலோமீட்டருக்கு அப்பால் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று காலை 8.50 மணிக்கு (இந்திய நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோளில் 7.3-ஆக பதிவான இந்த நிலநடுக்கம், ஃப்ளோர்ஸ் கடலை சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமல்லாமல் ஈஸ்ட் நுஸா டெங்காரா மாகாணம் முழுவதும் உணரப்பட்டது. அந்த மாகாணம் மட்டுமின்றி மேலும் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து உடனடியாக வெளியேறினர். சாலைகளில் வாகனங்களில் சென்றவர்கள், தங்கள்வாகனங்களை சாலைகளிலேயே போட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இந்த நிலடுக்கத்தின் காரணமாக பல கட்டிடங்களும், வீடுகளும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. பல சாலைகளிலும், பாலங்களிலும் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவங்களில் சிலர்காயமடைந்ததாகவும், அவர்கள்அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தாகவும் பேரிடர் மீட்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், நிலநடுக்க சம்பவங்களில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதனிடையே, இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவில் நேற்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, நிலநடுக்கம் ஏற்பட்டதும் இந்தோனேசியா மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள அண்டை நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் இந்தோனேசியாவின் தீவுகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இதற்கிடையே, சில மணிநேரங்களிலேயே சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது.
இந்தோனேசியாவின் சுமத்ராதீவுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோளில் 9.3-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி ஏற்பட்டது. இதில் இந்தோனேசியாவை சேர்ந்த 1,70,000 பேர் உட்பட 2,20,000 பேர் உயிரிழந்தனர். அதேபோல, கடந்த 2018-ம் ஆண்டு சுலாவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4,300 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.