Published : 14 Dec 2021 03:07 AM
Last Updated : 14 Dec 2021 03:07 AM

பிரிட்டனில் ஒமைக்ரானுக்கு முதல் உயிரிழப்பு : பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி செய்தார்

பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதை பிரதமர் போரிஸ்ஜான்சன் உறுதி செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தியா மட்டுமல்லாமல் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 63 நாடுகளில் இந்த ஒமைக்ரான் வகை வைரஸ் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படு வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை சுகாதார அதிகாரிகள் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதனிடையே நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக நேற்று முன்தினம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார். அவர் கூறும்போது, ‘‘இங்கே யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஒமைக்ரான் வைரஸ் பேரலை வந்து கொண்டிருக்கிறது. ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. இந்த வைரஸ்கள் எப்படி பரவும் என்பது குறித்து நமக்குமுன் அனுபவம் இருக்கிறது.

ஆதலால், நாட்டில் ஐந்தாம்கட்ட கரோனா எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,898 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இதுவரை மொத்தம் 3,137 பேருக்குதொற்று உறுதியாகி யுள்ளது. ஆகையால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொடர்ந்து கரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்" என்றார்.

விரைவில் பூஸ்டர் தடுப்பூசி

இந்நிலையில், பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இத்தகவலை, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன்செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘குறைந்தபட்சம் ஒரு நோயாளி ஒமைக்ரானால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிதிட்டம் அமல்படுத்தப்படும். இந்த மாதம் முதலே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் வாரங்களில் ஒமைக்ரான் அலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

இந்நிலையில் லண்டனில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா தொற்று உள்ளதா என பரிசோதித்துக் கொள்ள ஏராளமானோர் வரிசையில் காத்து நின்றனர். இதனால் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x