Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

ஒலிம்பிக் திருவிழாவின் 3-ம் நாள் - மேரிகோம், பி.வி.சிந்து மணிகா பத்ரா முன்னேற்றம் :

டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனுபாகர் ஏமாற்றம் அளித்தார். குத்துச்சண்டையில் மேரி கோம், டேபிள் டென்னிஸில் மணிகா பத்ரா, பாட்மிண்டனில் பி.வி.சிந்து ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழாவின் 3-வது நாளான நேற்று மகளிருக்கான குத்துச்சண்டையில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் 4-1 என்ற கணக்கில் டொமினிகாவின் மிகுஎலினா ஹெர்னாண்டஸ் கார்சியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆடவருக்கான லைட்வெயிட் குத்துச்சண்டையில் இந்தியாவின் மணீஷ் கவுசிக் 1-4 என்ற கணக்கில் இங்கிலாந்தின் லூக் மெக்கார்மேக்கிடம் தோல்வியடைந்தார்.

டேபிள் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சத்தியன் 11-7, 7-11, 4-11, 5-11, 11-9, 12-10, 11-6 என்ற செட் கணக்கில் ஹாங் ஹாங்கின் சியு ஹேங் லாமிடம் தோல்வியடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி 1-7 என்ற கோல் கணக்கில்ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் தில்பிரீத் சிங் மட்டும் ஒரு கோல் அடித்தார். ஆடவருக்கான நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக்கில் இந்தியாவின் ஹரி நட்ராஜும் மகளிர் பிரிவில் மானா படேலும் அரை இறுதிக்கு முன்னேறத் தவறினர்.

மகளிருக்கான பாய்மரப்படகில் இந்தியாவின் நேத்ரா குமணன் இரு சுற்றுகளின் முடிவில் ஒட்டுமொத்தமாக 49 புள்ளிகளுடன் 27-வது இடத்தில் உள்ளார். ஆடவர் பிரிவில் இந்தியாவின் விஷ்ணு சரவணன் முதல் சுற்றில் 14-வது இடம் பிடித்தார்.

மகளிருக்கான ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்கில் இந்தியாவின் பிரணதி நாயக் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறத் தவறினார்.

மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா ஜோடி 6-0, 6-7, 8-10 என்ற செட் கணக்கில் போராடி உக்ரைனின் நாடியா, லியுட்மிலா கிச்செனோக் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

பாட்மிண்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-7, 21-10 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் கேசேனியா பொலிகார்போவாவை வீழ்த்தினார்.

படகு வலித்தலில் ஆடவருக் கான லையிட்வெயிட் டபுள்ஸ் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட், அர்விந்த் சிங்ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார், திவ்யான்ஷ் சிங் பன்வார் ஆகியோரும் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர், யஷஸ்வினி சிங் தேஸ்வால் ஆகியோரும் பதக்க சுற்றுக்கு தகுதி பெறத் தவறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x