Published : 01 Jul 2021 03:14 AM
Last Updated : 01 Jul 2021 03:14 AM

பயங்கரவாத வழிமுறைகள் மாறிக்கொண்டிருக்கின்றன; புதிய தொழில்நுட்பங்களில் கூடுதல் கவனமும் முதலீடும் தேவை : ட்ரோன் தாக்குதல் குறித்து ஆனந்த் மஹிந்திரா கருத்து

ஜம்முவில் சமீபத்தில் ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்திய பாதுகாப்புத் துறை புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும் என மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, பயங்கரவாதிகளின் தாக்குதல் வழிமுறைகள் மாறிவருகின்றன. ட்ரோன்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் இந்திய பாதுகாப்பு துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு அதிக முதலீடுகளும் ஒதுக்கப்பட வேண்டும். பிரத்யேகமான

ட்ரோன்களை வாங்குவது, மற்றும் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ளும் இஸ்ரேலின் அயர்ன் டோம் போன்ற கட்டமைப்புகளை உருவாக்குவது போன்றவற்றை செயல்படுத்தப்படலாம்.

பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் முதலீடுகளில் அதிகப் பங்கை இவற்றுக்கு ஒதுக்கலாம் என்று கூறியுள்ளார்.

கடந்த ஞாயிறு அதிகாலை ஜம்மு விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பு அதிகம் உள்ள விமானப் படை தளத்தின் தொழில்நுட்ப பிரிவில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. ஆளில்லா ட்ரோன் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு விமானப்படை அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர். மேலும் அலுவலக மேற்கூரை சேதமானது.

இந்த தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்பத்திய நிலையில் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் ட்ரோன் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x