Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை : நிதி மோசடி வழக்கில் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

மகாத்மா காந்தியின் 2-வது மகன்மணிலால் காந்தியின் மகள்இலா காந்தி. இவர் தென்னாப்பிரிக்காவில் வசிக்கிறார். கடந்த1994 முதல் 2004 வரை தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார். மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இலா காந்தியின் கணவர்ராம்கோபின். இவர் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர்களது மகள் ஆசிஷ் லதா ராம்கோபின் (56). இவர் மார்க் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

கடந்த 2015 ஆகஸ்டில் தென்னாப்பிரிக்க தொழிலதிபர் மகராஜை, ஆசிஷ் லதா சந்தித்துப் பேசினார். "இந்தியாவில் இருந்து 3 கப்பல்களில் சணல் பொருட்களை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் இதற்கு வரி செலுத்த பணம் தேவைப்படுகிறது. இந்த தொகையை கடனாக வழங்கினால் லாபத்தை பகிர்ந்து கொள்ளலாம்" என்று மகராஜிடம் அவர் கூறினார்.

மகாத்மா காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ஆசிஷ் லதாவை நம்பிய மகராஜ், அவருக்கு ரூ.3.22 கோடியை கடனாக வழங்கினார். ஆனால் சணல் பொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை, போலி ஆவணங்களை காண்பித்து ஆசிஷ் லதா மோசடி செய்துள்ளார் என்பது மகராஜுக்கு தெரியவந்தது. பணத்தை திருப்பி கேட்டபோது ஆசிஷ் லதா கொடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் டர்பன் நீதிமன்றத்தில் மகராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கைதான ஆசிஷ் லதா ரூ.2.68 லட்சம் செலுத்தி ஜாமீனில் விடுதலையானார். 5 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் டர்பன் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. ஆசிஷ் லதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x