Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

மன அழுத்தம் காரணமாக : பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து நவோமி ஒசாகா விலகல் :

கிராண்ட் ஸ்லாம்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள நவோமி ஒசாகா தனது முதல் சுற்றில் பாட்ரிகா மரியா டிக்கை 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வீழ்த்தியிருந்தார். இந்த ஆட்டம் முடிவடைந்ததும் ஊடகங்களின் சந்திப்பில் ஒசாகா கலந்துகொள்ளவில்லை.

இதனால் போட்டி அமைப்பாளர்கள் அவருக்கு சுமார் ரூ.11 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அடுத்தடுத்த சுற்றுகளில் ஒசாகா இதுபோன்று ஊடக புறக்கணிப்பில் ஈடுபட்டால் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் எனவும் பிரெஞ்சு ஓபன் போட்டி அமைப்பாளர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக ஒசாகா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒசாகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “உண்மை என்னவென்றால், 2018 ம் ஆண்டு யுஎஸ் ஓபன் போட்டியில் இருந்து நான் நீண்ட காலமாக மனச்சோர்வை சந்தித்தேன், அதை சமாளிக்க எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நான்மிகவும் பதற்றமடைகிறேன், என்னால் முடிந்த சிறந்த பதில்களை உங்களுக்கு வழங்குவது மன அழுத்தமாக இருக்கிறது.

பாரீஸில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதை உணர்ந்தேன். எனவே என்னை கவனித்துக்கொள்ளும் விதமாகவே ஊடக சந்திப்பை தவிர்ப்பது நல்லது என்று நினைத்தேன். இதனால் தான் நான் அதை முன்கூட்டியே அறிவித்தேன், ஏனென்றால் விதிகள் மிகவும் காலாவதியானவை என நான் உணர்கிறேன், அதை முன்னிலைப்படுத்த விரும்பினேன். போட்டி அமைப்பாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளேன். தற்போதைக்கு சிறிது காலம் டென்னிஸ் களத்தில் இருந்து விலகி இருக்கப்போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x