Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

கொல்கத்தா துறைமுகத்தில் தரைதட்டிய சரக்கு கப்பல் மீட்பு :

கொல்கத்தா துறைமுகத்தில் தரைதட்டி நின்ற சரக்கு கப்பல் நேற்று மீட்கப்பட்டது.

இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாக விளங்குவது கொல்கத்தாவில் உள்ள சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம். நாளொன்றுக்கு பல கோடி மதிப்பிலான சரக்கு வர்த்தகம் இங்கு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்த ‘கோட்டா ரஜின்' என்ற சிறிய ரகசரக்கு கப்பல், திடீரென பாதையில் இருந்து விலகி தரைதட்டி நின்றது. ‘ஃபால்ட்டா ஸ்ட்ரெச்' கால்வாயின் குறுக்கே கப்பல் தரைதட்டி நின்றதால் அங்கு மற்ற கப்பல்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதற்காக, அந்தக் கால்வாயில் கப்பல்கள் செல்வதற்காக வேறு பாதைகள் திறந்து விடப்பட்டன. எனினும், பெரிய சரக்கு கப்பல்களால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, நூற்றுக்கணக்கான துறைமுக ஊழியர்கள் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். கப்பலின் அடியில் இருந்த மணல் பரப்பு, ராட்சத இயந்திரங்களை கொண்டு நேற்று முன்தினம் காலை அகற்றப்பட்டது.

பின்னர் கப்பலை அங்கிருந்து இழுக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கவிடப்பட்டது. இந்தச் சம்பவத்தால் பெரிய அளவில் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் எகிப்தில் உள்ள சூயஸ்கால்வாயில் சரக்கு கப்பல் ஒன்று தரைதட்டி நின்றதால் உலகம் முழுவதும் வர்த்தகம்பாதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x