Last Updated : 11 Apr, 2021 03:15 AM

 

Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

குழந்தைகளை ஆளும் செல்போன் :

வீட்டில் செல்போனின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை உணர்ந்தார் கல்பனா. தனக்கு ஒரு போன் கணவனுக்கு ஒரு போன் என்றிருந்தது. ஒன்று பழுதாகி புதிதாக ஒன்று வாங்கியதால் மூன்றானது.

வீட்டில் எல்லோரும் தனித்தனியாக போனைப் பயன்படுத்தத் தொடங்கினர். மகனும் மகளும் போனுக்காகச் சண்டையிட்டனர். முதலில் போனை ஆளுக்குக் கொஞ்ச நேரம் எனப் பிரித்துக் கொடுத்தார். அதன் பின்னும் சண்டை ஓயவில்லை. தனது போனை ஒரு குழந்தைக்கும் மூன்றாம் போனை இன்னொரு குழந்தைக்கும் கொடுத்துவிட்டுத் தான் தியாகிபோல் இருந்தார். அது கல்பனாவுக்குப் பெரிய சவாலாக இருந்தது.

வீட்டுக்குள் மூன்று தீவுகள்

மகள் போனில் வீடியோக்களாகப் பார்த்தாள். மகன் விளையாடினான். கணவன் வீடியோ, செய்திகள் தகவல்கள், வாசிப்பு, டைப் செய்வது என்றிருந்தார். போன் முன் அவர்களாகச் சிரித்துக்கொள்வார்கள், சீரியசாக முகத்தை வைத்துக்கொள்வார்கள், அமைதியாக அதில் ஊன்றிக் கவனிப்பார்கள். கூகுள் விளையாட்டின் தாக்கத்தால் குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டதைக் கேள்விப்பட்ட போது கல்பனாவின் தூக்கம் கெட்டது. தன் குடும்பத்தின் கைகளில் இருந்து போனைப் பிடுங்கும் வேலையில் ஈடுபட்டாள். மகன் அது போன்ற விளையாட்டுகளைத் தான் விளையாடுவதில்லை என்று உறுதி தந்தான். “நான் வீடியோதானே பார்க்கிறேன்” என்று மகள் வசனம் பேசினாள். “தேவையில்லாமல் கவலைப்படாதே” என்றார் கணவர். அப்படியொரு கட்டத்தில் சேலம் விஷயம் பொதுவெளிக்கு வந்தது. “நான் மட்டுமா வருத்தப்படுகிறேன்?” என்ற கேள்வியுடன் சமூகத்தில் என்ன நடக்கிறது என்று கல்பனா உற்றுநோக்கினார்.

பெற்றோர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?

பெற்றோர் பலருக்கும் தன்னுடைய அனுபவம்தான் என்பதை அவர்களுடைய பேச்சு உணர்த்தியது.

“அவனுக்கு எப்பவும் விளையாட்டுத்தான். அதுல வரும் எல்லா விளையாட்டையும் விளையாடுறான். தானாகவே பேசுகிறான், சிரிக்கிறான். விளையாட்டு முடிந்ததும் அதைப் போல் தனியாகப் பேசி கத்துகிறான். விளையாட்டில் அடுத்தடுத்த நிலைக்குப் போகிறான். அது மட்டுமல்ல, புதுப் புது விளையாட்டை விளையாடுகிறான்”.

ரெண்டு வயசுக் குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டணும்னா கைல செல்போன் தரவேண்டியிருக்கு, என்ன செய்யறது? நாலு வயசுப் பிள்ளைக்குக்கூட செல்போனைக் கொடுக்கலைன்னா கோவம் கோவமா வருது. அவர்கள் படுத்தும் பாடு தாங்க முடியாம தொலையுது போ அப்டின்னு கொடுக்க வேண்டியிருக்கு. பசியில் அழும் புள்ளைக்குப் பால் கொடுத்தா அமைதியா இருக்கிற மாதிரி போனுக்காக அழுது பின் போனுடன் அடங்கி அமைதியாய் உட்கார்ந்துடுதுங்க”

“போன் பாக்குறத பார்த்தா அப்பா அடிச்சிடுவார். அதனால், அப்பா எப்ப வெளியே போவார்னு காத்துக்கிட்டு இருப்பான். அப்பா வீட்டில் இருப்பதே அவனுக்குப் பிடிக்கிறதில்லை”.

“தொடக்கத்துல விளையாண்டான். அப்புறம் போட்டோ எடுத்து ஏதாவது செய்வான். நமக்குத் தெரியாததெல்லாம் அவனுக்குத் தெரியும். அவ்வளவு அறிவு. ஆனால், இப்பதான் யாரோ அவனைக் கெடுத்துட்டாங்க. சில நேரம் நைட்ல எல்லாம் பாக்குறான். தனியாவே உக்காந்து பாக்குறான். அதப்பத்தி பேசுனா பிடிக்கலை. கோவப்படுறான்”.

“ஸ்கூல்ல இருந்து வந்ததும் போன் வேணும். வீட்டுப்பாடம் பாக்குறேன், டீச்சர் நடத்துற பாடம் புரியலை அதுனால நெட்ல படிக்கணும்னு சொல்றான்”.

“அந்த ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைகள் யூடியூபில் ஏதேதோ படம் பாக்குறாங்களாம். நல்லவேளை என் புள்ளைய அங்கே விடல”.

“புள்ளைங்ககிட்ட போன் கொடுப்பதில் என்ன தப்பு? எனக்குத் தெரிஞ்சி ஒரு தப்பும் இல்லை. போனுக்குப் பிறகுதான் நாங்க மகிழ்ச்சியா இருக்கோம். ‘டிக் டாக்’கில் குடும்பமா டான்ஸ் ஆடிப் போடுறோம். ஸ்டேட்டஸில் போட்டோ போடுவதற்காக அடிக்கடி சிரிக்கிறோம். யார் யார் எங்க இருக்காங்க, என்ன செய்றாங்கன்னு எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியுது. புள்ளைங்களோட உக்காந்து இதைப் பார் அதைப்பார்னு பேச முடியுது”.

- இதுபோன்ற உரையாடல்களுடன் செல்போனைத் திருடி வைத்திருப்பது, செல்போன் வாங்குவதற்காக விடுமுறையில் வேலைக்குப் போய்ப் பின் பள்ளியை விட்டே நின்ற குழந்தைகள் போன்றவற்றைப் பற்றியும் கல்பனா தெரிந்துகொண்டார். தன் வீட்டில் நடப்பதைப் போலவே எல்லா இடங்களிலும் நடப்பதைப் பார்த்துச் செய்வதறியாமல் திணறினார். ஆனால், அங்கேயே நின்றுவிடவில்லை. தெளிவுபெற வேண்டும் என்பதற்காக வல்லுநர்கள் சிலரைச் சந்தித்தார். அவர்களிடம் பேசியது அவருக்குத் தெளிவைத் தந்தது.

கண்மூடித்தனமான ஆயுதம்

குழந்தைகளுக்கு செல்போனில் ஏற்படும் ஈர்ப்பே தினசரி வாழ்வில் அவர்கள் ஊக்கத்துடன் செயல்பட எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. இன்னொரு வகையில் பார்த்தால் நம் மீது இருக்கும் கோபத்தைக் காட்டவும் நம்மை எதிர்க்கவும் அவர்கள் பயன்படுத்தும் ஆயுதமாக செல்போனைப் பயன்படுத்துகின்றனர். கல்வியும் குடும்பமும் என்னவாக இருக்கின்றன என்பதைக் குழந்தைகளின் அத்துமீறிய செல்போன் பயன்பாட்டின் மூலம் உணரலாம். கல்வி சுவாரசியமாக இல்லாதது, மதிப்பெண்களை முன்வைத்து மனப்பாடக்கல்வி தொடர்வது, கண்காணிக்கப்படுவது, கண்டிக்கப்படுவது போன்ற பெரியவர்களின் செயல்பாடுகளிலிருந்து தப்பிக்கவும் பெரும்பாலான குழந்தைகள் செல்போனில் மூழ்குகின்றன.

“பரீட்சையை முடிச்சிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள். பாஸ் பண்ணிட்டா செல்போன் வாங்கித் தருகிறேன் என்று குழந்தைகளிடம் டீல் பேசுகிற பெற்றோரும் நம்மிடையே உண்டு. போனுக்குள் தன்னை நுழைத்துக்கொண்ட குழந்தைகளை மலையேறுதல், விளையாடுதல் போன்ற செயல்பாடுகள்கூட மகிழ்விக்க முடிவதில்லை” என்கிறார் ‘க்ரியா சில்ட்ரன்ஸ் அகாடமி’யின் தாளாளர் கிறிஸ்டி சுபத்ரா.

நேரத்தைச் சாப்பிடும் கருவி

துப்பாக்கியில் சுட்டு விளையாடப் பழகும் குழந்தை, அவ்விஷயம் நிஜத்தில் நடக்கும்போதும் அருமை என்கிறது. இப்படிப்பட்ட ஆபத்துகளை நம்மையறியாமல் நாமே ஊக்குவிக்கிறோம். தங்கள் குழந்தைகளைப் பற்றி அக்கறையோடு யோசிப்பவர்கள் மனப்பாடக் கல்வியையும் குழந்தைகள் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றில் அதிக நேரம் செலவிடுவதையும் தவிர்க்கின்றனர். அதற்கேற்ற பள்ளிகளையும் மாற்று ஏற்பாடுகளையும் கண்டடைகின்றனர்.

“ஒரு விஷயத்தைக் கற்பதற்கு ஒரு சிறு பங்கை இணையதளம் தருமே தவிர ஒரு ஆசிரியராக ஒருபோதும் ஆக முடியாது. யாரோ சிலர் கூகுள் உதவியுடன் காகித மடிப்புக் கலையைக் கற்றுக்கொள்வதையும், சமையல் பழகுவதையும் பொது உதாரணமாகக் கொள்ள வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும். விதிவிலக்குகளையே பொதுவான நடைமுறையாக நம்மை நம்பவைப்பது போனில் உள்ள சுவாரசியமான விஷயங்களே. எல்லா வயது ஆட்களையும் எல்லாவகையான விருப்பங்களையும் நிவர்த்தி செய்யக்கூடியதாக உள்ளது. தொடர்ந்து தன்னுடன் வைத்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கக் கருவியின் முன் மூளையும் மனமும் ஸ்தம்பித்துப் போகிறது. ஒரு குழந்தை போனில் படிப்பதாகப் பல வகைகளில் விவரிக்கிறது. ஆனால், உண்மை வேறாக இருக்கிறது. படித்துக்கொண்டிருக்கும் குழந்தையின் கவனம் வாசலில் செல்லும் ஊர்வலத்தால் சிதறும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், போனிலும் இணையதளம் மூலமும் வழங்கப்படும் அத்தனை விஷயங்களிலும் குழந்தைகள் மனம் சிதறடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என எப்படி எதிர்பார்ப்பது?

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களிலும் கைபேசிப் பயன்பாடு அதிகம் இருப்பதால் அதைக் கற்றலுக்கானதாக ஆக்கிப் பார்த்தோம். போனில் தேர்ந்தேடுத்து வீடியோ அனுப்புவது, சில விஷயங்களைக் கண்டுபிடித்து வரச் சொல்வது, அது பற்றி உரையாடுவது என முயன்றோம். இளங்குழந்தைகளைச் சிலவற்றை எளிதாகச் செய்யவைப்பதுபோல் வளரும் குழந்தைகளைச் செய்யவைக்க முடிவதில்லை” என்கிறார் அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் சிவக்குமார்.

குழந்தைகளின் செயல்படும் திறனையும் சிந்தனையையும் முடக்கிவைக்கும் செல்போன் பயன்பாட்டைக் கட்டுக்குள் வைக்கும் வழியை கல்பனா கண்டுபிடித்துச் செயல்படுத்தினார். அவரது வீட்டில் போன் என்பது போனாக மட்டுமாக மாறியதால் குடும்பம் குடும்பமாக ஆனது.

(சேர்ந்தே கடப்போம்)

கட்டுரையாளர், கல்விச் செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x