Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM

2-வது ஆட்டத்திலும் அசத்தல் வெற்றி ஆஸி.க்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

வெற்றி மகிழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா.

சிட்னி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கேப்டன் மேத்யூ வேட் 32 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 58 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்களும் விளாசினர். மேக்ஸ்வெல் 22, ஹெண்ட்ரிக்ஸ் 26 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி சார்பில் டி.நடராஜன் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்கள் கைப்பற்றினார். இதையடுத்து 195 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு ஷிகர் தவண், கே.எல்.ராகுல் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்களில் 56 ரன்கள் விளாசப்பட்ட நிலையில் ஆண்ட்ரூ டை பந்தில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 30 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்க ஷிவர் தவண் மட்டையை சுழற்றினார். 11-வது அரை சதத்தை கடந்த ஷிகர் தவண் 52 ரன்கள் விளாசிய நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 10 பந்துகளில், 15 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வெப்சன் பந்தில் வெளியேறினார். இதன் பின்னர் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். விராட் கோலி 40 ரன்கள் சேர்த்தார்.

கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. முதல் பந்தில் 2 ரன்கள் சேர்த்த ஹர்திக் பாண்டியா அடுத்த பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். 3-வது பந்தில் ரன் ஏதும் சேர்க்கப்படாத நிலையில் 4-வது பந்தை ஹர்திக் பாண்டியா டீப் மிட் விக்கெட் திசையை நோக்கி சிக்ஸருக்கு பறக்கவிட இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஹர்திக் பாண்டியா 22 பந்துகளில் 42 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 5 பந்துகளில் 12 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி டி20 ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x