Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

2021-ல் ஐபிஎல் மெகா ஏலம் நடந்தால் சிஎஸ்கே அணி தோனியை தக்கவைக்கக் கூடாது முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி, இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் 7-வது இடத்தையே பிடித்தது.

இதற்கிடையே 2021-ம் ஆண்டில் சிஎஸ்கே அணியில் விளையாடுவேன் என அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ஆனால், எந்தவித உள்ளூர் போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் மட்டும் தொடர்ந்து எத்தனை ஆண்டுகளுக்கு அவரால் விளையாட முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தச் சூழலில்தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

அடுத்த ஆண்டு ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்துக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை தக்கவைத்துக் கொள்ளாமல் விடுவித்துவிட வேண்டும். ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு வீரரை எடுத்தால் 3 ஆண்டுகள் வைத்து விளையாட வேண்டும். ஆனால் தோனி சிஎஸ்கே அணியுடன் 3 ஆண்டுகள் தங்கியிருப்பாரா? தோனியை வைத்திருக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.

தோனி உங்களுடன் 3 ஆண்டுகள் தங்கியிருக்கவில்லை, 2021 சீசனில் மட்டுமே விளையாடுகிறார் என்றால் 2022-ம் சீசனுக்கு ரூ.15 கோடியை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள். ஆனால் ரூ.15 கோடி மதிப்புள்ள ஒரு வீரரை நீங்கள் எப்படி கண்டுபிடிப்பீர்கள்? மெகா ஏலத்தில் கிடைக்கும் நன்மை என்னவென்றால், அணி நிர்வாகத்திடம் பணம் இருந்தால், பெரிய அணியை உருவாக்க முடியும். மெகா ஏலத்துக்கு தோனியை விடுவித்தால் அவரை ரைட்டூ மேட்ச் கார்டு மூலம் தேர்வு செய்யலாம். இதன் மூலம் விரும்பிய தொகை வைத்திருப்பதன் மூலம் சரியான வீரர்களை தேர்வு செய்யலாம்.

இப்போதுள்ள சூழலில் சிஎஸ்கே அணிக்கு மெகா ஏலம் நடத்துவது அவசியம். இப்போது இருக்கும் அணியைக் கலைத்துவிட்டு, புதிய அணியை உருவாக்க விரும்பினால், டுபிளெஸ்ஸிஸ், ராயுடுவுக்கு மட்டும் செலவிடலாம்.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x