

பாட்மிண்டன் வீராங்கனை 25 வயதாகும் பி.வி.சிந்து மிகப்பெரிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
நான் என் உணர்வுகளைச் சுத்தமாக்குவது பற்றி யோசித்து வருகிறேன். உலகம் முழுவதையும் சிக்கலில் வைத்துள்ள கண்ணுக்குத் தெரியாத வைரஸை நான் எவ்வாறு தோற்கடிப்பேன்? நான் வீட்டில் முடங்கிப் பல மாதங்களாகி விட்டன. நாம் வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் நம்மை நாமே கேள்விக்கு உள்ளாக்குகிறோம். இதயத்தை நொறுங்கச் செய்யும் ஏராளமான கதைகளை இணையதளத்தில் படித்த பின் என்னைப் பற்றியும், நாம் வாழும் இந்த உலகத்தைப் பற்றியும் நிறைய கேள்விகள் எழுகின்றன.
இன்று நான் இந்த மன அமைதியற்ற நிலையில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எதிர்மறை எண்ணங்களில் இருந்து ஓய்வு பெறுகிறேன். அச்சத்தில் இருந்து ஓய்வு பெறுகிறேன். நான் அசுத்தமான பழக்க வழக்கங்களில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன்.
ஆம். டென்மார்க் ஓபன் நடக்கவில்லை. அதற்காகப் பயிற்சி எடுப்பதை நிறுத்தவில்லை. வாழ்க்கை உங்களிடம் வரும்போது, இரு மடங்கு கடினமாக எழ வேண்டும். ஆதலால், அடுத்து வரும் ஆசியப் கோப்பையில் விளையாடுவேன். என்னுடைய போராட்ட குணத்தை விட்டுவிட மாட்டேன். நமக்குப் பாதுகாப்பான உலகம் இருக்கும் வரை அவ்வாறு தொடர்ந்து செய்வோம். இவ்வாறு பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தால் சிந்து ஓய்வு அறிவித்துவிட்டாரா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.