

இமயமலை. எத்தனை பேரு நேரா போய் பார்த்து இருக்கீங்க? ஓ ரெண்டு பேர் பார்த்து இருக்கீங்களா, நல்லது. எப்படி இருந்திச்சு? ரொம்ப பிரமாதமா, கிராண்ட்-ஆ இருந்துச்சு, எப்படி சொல்றதுன்னே தெரியல இப்படியெல்லாம் நீங்க சொல்றது எனக்கு கேட்குது. ஆமாம். அப்படித்தான் இருக்கும். உங்க எல்லாருக்கும் சொல்றேன், அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா செலவுபண்ற பணத்தை சேர்த்து வச்சி, இமயமலை அடிவாரம்வரைக்கும் ஒருமுறை போயிட்டு வாங்க. பிரம்மாண்டமா இருக்கும். சரி. இமயமலை பத்தி தெரிஞ்சுக்குவோம். அதுக்கு முன்னால ஒரு கேள்வி. ஆங்காங்கே நாம, நிறைய மலைகளை பார்க்கிறோம் இல்லையா. இந்த மலைகள் எல்லாம் எப்படி உருவாகி இருக்கும், ஏதாவது தோணுதா?
மலைக்கு ரூல்ஸ் உண்டா? - கதையா கற்பனையா நிறைய தோணும். அறிவியல்பூர்வமா சொல்லணும்னா பூமிக்குக் கீழே, மேலே பல தட்டுகள் இருக்கு. Plates-னு சொல்லலாம்; layers-னும் வச்சிக்கலாம். இதெல்லாம் ஒன்னுக்கொன்னு வேகமா, பலமா, ஆக்ரோஷமா மோதிக்கிச்சு. அந்த அதிர்வுல, பூமியோட மேல்மட்டம் அதாவது தரை, மேல எழும்பி அப்படியே நின்னுடுச்சி. அதுதான் மலைன்னு சொல்றோம். இப்போதைக்கு இந்த விவரம் போதும். அடுத்ததா, முக்கியமான ஒரு கேள்வி வருது. எவ்வளவு உயரம் இருந்தா, அதை 'மலை'ன்னு சொல்லலாம்? ஒரு மலையின் குறைந்தபட்ச உயரம் என்னவாக இருக்கும்?
அப்படி எதுவும் இருக்கா? ஒரு மலைன்னா, இவ்வளவு உயரம் இருக்கணும்னு ‘ரூல்' எதுவும் இருக்குதா? இல்லை. அப்படி கட்டாய விதிஎதுவும் இல்லை. ஆனால், பொதுவாக கடல் மட்டத்தில் இருந்து, 1000 அடிக்கு மேல் உயரம் இருக்க வேண்டும். ஆயிரம் அடின்னா எவ்வளவு தூரம் இருக்கும்? 300 மீட்டர் உயரம் இருக்கணும். இதுக்கு குறைவா இருந்துச்சுன்னா மேடுன்னு சொல்லலாம் மலைன்னு சொல்ல முடியாது. ஞாபகம் இருக்கட்டும், இது புவியியல் வல்லுனர்களின் கருத்து அல்லது எதிர்பார்ப்பு. கொஞ்சம் கூடவோ குறைவோ இருக்கலாம். நாங்க மலைனுதான் சொல்லுவோம், மேடுன்னுதான் அழைப்போம் அப்படின்னாலும், தப்பே இல்லை. ஒரு மலை தனியா இருக்கலாம்; அடுத்தடுத்து அடுக்கடுக்கா தொடர்ந்தும் இருக்கலாம். கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை இப்படியும் இருக்கும்.
பனி உறைவிடம்: சரி இமயமலைக்கே வருவோம். ‘ஹிமாலயா' (Himalaya) என்பதைத்தான் ‘இமயம்' என்கிறோம். வடமொழியில் இதற்கு, ‘பனிஉறைவிடம்' என்று பொருள் கூறுகிறார்கள். (ஹிம் - பனி; ஆலயா - உறைவிடம்). பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தோ-ஆஸ்திரேலியா தட்டு, ஆசிய-ஐரோப்பிய தட்டு ஆகிய இரண்டும் மோதிக் கொண்டதில் எழுந்தது இமயம் என்று கூறப்படுகிறது. உலகின் மிகப் பெரிய மலை இது; ஆனால், மிகப் பழமையான மலை அல்ல. இந்தியா மட்டுமன்றி, நேபாளம், பூடான் நாடுகளுக்கும் இமயம் சொந்தமானது. சீனா, பாகிஸ்தான் நாடுகளையும் தொட்டுச் செல்கிறது. என்ன உயரம்? எவ்வளவு சிகரங்கள்? எத்தனை ஜீவநதிகள்? தொடர்ந்து பார்ப்போம்.
கேள்விக்கு என்ன பதில்? - ‘மலையோட பொதுவான பயன்கள் என்ன? அதாவது, ஒரு மலை இருப்பதால் நாம் பெறுகிற நன்மைகள் என்ன? நீங்களாக சிந்தித்து, 50 சொற்களுக்கு மிகாமல் பதில் அனுப்புங்களேன்.
(வளரும்)
தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com