Published : 09 Dec 2021 03:06 AM
Last Updated : 09 Dec 2021 03:06 AM

மாற்றுத் திறனாளிகளுக்கு - கோயில்களில் இலவச திருமணம் : திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் உள்ள கோயில்கள், கோயில் திருமண மண்டபங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின், கோயில்களில் அவர்களுக்கு நடக்கும் திருமணத்துக்கான கட்டணம் வசூலிக்கப்படாது. கோயில் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் மண்டபத்துக்கான பராமரிப்புக் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக, இலவச திருமணதிட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடக்க உள்ள மாற்றுத் திறனாளி திருமணத்துக்கு மணமகன் எஸ்.சுரேஷ்குமார், மணமகள் எஸ்.மோனிஷா ஆகியோருக்கு கோயிலில் திருமணம் செய்ய கட்டணம் இல்லைஎன்ற உத்தரவை முதல்வர் வழங்கினார். மேலும், மணமக்களுக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்பி.கே.சேகர்பாபு, அறநிலையத்துறை செயலர் பி.சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x