Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் மரணத்தில் மர்மம் - சிபிஐ விசாரணைக்கு பழனிசாமி வலியுறுத்தல் :

சென்னை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் மரணத்தில் மர்மம் இருக்கிறது. எனவே, அவரது தற்கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசு, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து பின்புற வாசல் வழியாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அதுபோல அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளை எதிர்க்காமல் காவல்துறையை, குறிப்பாக லஞ்ச ஒழிப்புத் துறையை தவறாக பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் புகார் சுமத்தி, அவர்களது வீடுகள் மட்டுமல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் என்று குறைந்தது சுமார் 30, 40 வீடுகளில் சோதனை நடத்துகின்றனர்.

முந்தைய அதிமுக அரசு மீது திமுக அரசு சுமத்தும் அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு சாதகமாக செயல்படாத, உடன்படாத நேர்மையான அதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்தனர். உடன்படாத, பணியிட மாறுதல் செய்ய முடியாத நிலையில் உள்ள அதிகாரிகள் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படுகின்றனர் என செய்தி வந்தன.

வெங்கடாசலம், அதிமுக அரசால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தார். அதிமுக அரசு மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப நீங்கள் வாக்குமூலம் அளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்யுங்கள் என்று திமுக அரசால் அவர் மிரட்டப்பட்டதாக கூறப்பட்டது. இவர் ஒருவர் மட்டுமல்ல. இதுபோல் பல அதிகாரிகள் மிரட்டப்பட்டு வருகின்றனர்.

ராஜினாமா செய்யாததால் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனை நடத்தி சுமார் 11 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அரசு கூறியது. விசாரணை என்ற பெயரில் அவரையும், அவரது குடும்பத்தினரையும் வரவழைத்து உண்மைக்கு மாறாக சாட்சியம் பெறுவதே லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நோக்கமாக இருந்தது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

எனவேதான், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சியினரான நாங்கள் சந்தேகிக்கிறோம்.

காவல் துறையினரை நாங்கள்கேட்டுக் கொள்வதெல்லாம், சட்டப்படி செயல்படுங்கள், நேர்மையாக செயல்படுங்கள், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து ஆளுங்கட்சியினரின் விருப்பங்களுக்கு ஏற்பவளைந்து நெளிந்து செயல்படாதீர்கள். நேர்மையான அதிகாரிகளை மிரட்டி, வாக்குமூலம் பெறுவதை கைவிடுங்கள்.

வெங்கடாசலம் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள்சந்தேகப்படுகின்றனர். எனவே, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x