Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு - ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இணைந்து மனு தாக்கல் : வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை; விரைவில் இறுதி முடிவு அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோர் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறும் நிலையில், இன்று அல்லதுநாளை இறுதி முடிவு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கு மூலம்இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள் என்று கடந்த டிச.1-ம் தேதிநடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மறுநாளே, அப்பதவிகளுக்கான தேர்தல் டிச.7-ம் தேதி நடைபெறும் என்றும், மனுத்தாக்கல் டிச.3, 4 தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம்வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இன்று அமாவாசை என்பதால், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பழனிசாமி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். முன்னதாக, காலை 10.50-க்கு ஓபிஎஸ்ஸும், 11 மணிக்கு பழனிசாமியும் அதிமுகதலைமை அலுவலகம் வந்தனர்.அவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செய்துவிட்டு, இணைந்தே அலுவலகத்துக்குள் சென்றனர். அதன்பின், காலை11.20 மணிக்கு தேர்தல் ஆணையர்களான முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் இருவரும் சேர்ந்து வேட்பு மனுக்களை வழங்கினர்.

நிர்வாகிகள் வாழ்த்து

இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் பூங்கொத்து, சால்வை அளித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு இருவரும் போட்டியிட வேண்டி, முன்னாள் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் தலா ரூ.25,000 செலுத்தி விருப்பமனு அளித்தனர். இதன் மூலம் 150-க்கும்மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரும் ஆலோசனைநடத்தினர். இன்று (டிச.5) ஜெயலலிதாவின் நினைவு நாள் என்பதால் அதற்கான நிகழ்ச்சிகள் குறித்து, சென்னையில் உள்ளமாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்தனர்.

பின்னர் 3.30 மணியளவில் அதிமுக அலுவலகத்தில் இருந்துஒருங்கிணைப்பாளர்கள் புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து தேர்தல்ஆணையர்களான சி.பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

தேர்தல் குறித்து பொன்னையன் கூறும்போது, ‘‘அதிமுகவின் சட்டவிதிகள் அடிப்படையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாளை (இன்று) வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களின் எண்ணிக்கை குறித்து நாளைபரிசீலனையின்போது தெரிவிக்கப்படும். தேர்தல் தொடர்பாக எந்தபுகாரும் வரவில்லை. நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு தாக்கப்பட்டவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x