Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM

அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகத்தில்வாடிக்கையாளரின் புகைப்படம் ஒட்ட வேண்டும் : சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருச்சி

அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகங்களில் (பாஸ் புக்) வாடிக்கையாளர்களின் புகைப்படம் ஒட்ட அஞ்சல் துறை அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவில் ஏறத்தாழ 1.50 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. ஒரு காலத்தில் அஞ்சல் சேவையில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த அஞ்சல் துறை, கூரியர் நிறுவனங்களின் வரவால் கடந்த 20 ஆண்டுகளாக இறக்கத்தை சந்தித்தன. இந்நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏடிஎம் வசதி உள்ளிட்ட பல்வேறு புதிய சேவைகளால் அஞ்சல் துறை மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.

இந்தநிலையில், அண்மைக்காலமாக அஞ்சலக சேமிப்புக் கணக்குகள் வைத்திருப்பவர்களின் சேமிப்புக் கணக்கு புத்தகத்தில் வாடிக்கையாளரின் புகைப்படம் ஒட்டப்படுவதில்லை எனவும், இதனால் பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய புகைப்படத்துடன் கூடிய ஒரு அடையாள ஆவணத்தை இழப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கோ.சண்முகவேலு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள் தான் அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். ஏற்கெனவே அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குப் புத்தகத்தில் அவர்களது புகைப்படம் ஒட்டப்பட்டு வந்தது. ஆனால், தற்போது புகைப்படம் ஒட்ட அஞ்சல் துறை மறுத்து வருகிறது. இது தொடர்பாக அஞ்சல்துறையின் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளரிடம் கடிதம் மூலம் விளக்கம் கேட்டபோது, தற்போதுள்ள விதிகளின்படி சேமிப்புக் கணக்கு புத்தகங்களில் புகைப்படம் ஒட்டுவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால், ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய புகைப்படத்துடன் கூடிய ஒரு அடையாள ஆவணத்தை இழக்கின்றனர்.

மேலும், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தைக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த இயலாத சூழல் உள்ளது.

எனவே, அஞ்சலக சேமிப்புக் கணக்கு புத்தகத்தில் முன்பு இருந்தது போல, வாடிக்கையாளர்களின் புகைப்படத்தை ஒட்ட அஞ்சல் துறை அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக அஞ்சல்துறை அலுவலர்களிடம் கேட்ட போது, ‘‘சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் புதிய வடிவில் மாற்றப்பட்டு விட்டன. இந்த புத்தகங்களில் புகைப்படம் ஒட்டுவதற்கான இடமே வழங்கப்படவில்லை என்பதால், புகைப்படம் ஒட்டப்படுவதில்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x