Published : 30 Nov 2021 03:06 AM
Last Updated : 30 Nov 2021 03:06 AM

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய - மகாராஷ்டிர இளைஞருக்கு கரோனா உறுதி : ‘ஒமைக்ரான்’ தொற்றாக இருக்குமோ என ஆய்வு

புதுடெல்லி

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய மகாராஷ்டிர மாநில இளைஞருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு புதிய உருமாற்ற வைரஸான ஒமைக்ரான் பாதிப்பாக இருக்குமா என்பதற்கான சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளி யாகியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பரவிய கரோனா மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கரோனா வைரஸ் (பி.1.1.529) அண்மையில் கண்டுபிடிக் கப்பட்டது. இதற்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியது. உலகின் சில நாடுகளில் இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்கள் எல்லைகளை மீண்டும் மூடிவருகின்றன.

இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன. இந்நிலையில், தென்னாப்பிரிக் காவில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் டோம்பிவிலிக்கு திரும்பியுள்ள 32 வயதான நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரை அங்குள்ள சுகாதார நிலையத்தில் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய, இவரின் சோதனை மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ‘‘ஆய்வின் முடிவுகள் வர 7 நாட்கள் ஆகும். அதுவரை அவர் கண்காணிப்பில் இருப்பார்’’ என கல்யாண் டோம்பிவிலி நகராட்சியின் பெருந்தொற்று கட்டுப்பாட்டு அதிகாரி பிரதீபா பான்பாடில் கூறியுள்ளார்.

பிரதமர் வலியுறுத்தல்

இதனிடையே, நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

புதிய வகை கரோனா வைரஸ் தொடர்பாக வரும் செய்திகள் நாம் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் ஒவ்வொரு குடிமகனின் ஆரோக்கியமும் மிக முக்கியம் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கு மாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை நாடு ஏற்கெனவே கடந்துள்ளது. தற்போது 150 கோடி டோஸ்கள் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒமைக்ரான் மிக ஆபத்தானது

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட தொழில்நுட்ப குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது.

புதிய ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் உலக அளவில் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. ஒமைக்ரான் வைரஸால் மற்றொரு கரோனா பரவல் ஏற்படுமானால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கலாம். இந்த வகை வைரஸ் எவ்வளவு விரைவாக பரவும், எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் இன்னும் நிச்சயமற்ற தன்மையே உள்ளது. இந்த வகை வைரஸால் இதுவரை உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை

ஒமைக்ரான் வைரஸின் பரவும் தன்மை, தீவிரத் தன்மை, இதற்காக கரோனா தடுப்பூசி, பரிசோதனை மற்றும் சிகிச்சையில் தேவைப்படும் மாற்றங்கள் பற்றியெல்லாம் கண்டறிய பல வாரங்கள் ஆகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

13 நாடுகளில் ஒமைக்ரான்

ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 13 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பிற இடங்களில் இருந்து வந்த பயணிகள் ஆவர்.

தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேஸ், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு காணப்படுகிறது. போட்ஸ்வானாவில் இதுவரை 19 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் 13 பேர், பிரிட்டனில் 3 பேர், ஜெர்மனி, டென்மார்க், ஹாங்காங்க், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் தலா இருவர், பெல்ஜியம், இத்தாலி, செக் குடியரசு ஆகிய நாடுகளில் தலா ஒருவரிடம் இந்த வைரஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x