Published : 28 Nov 2021 03:07 AM
Last Updated : 28 Nov 2021 03:07 AM

கோவை மாநகரில் வரும் 10-ம் தேதி வரை - ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த தடை :

கோவை

கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சமீப காலமாக, பல்வேறு அமைப்பினர், ஆர்ப்பாட்டம், போராட்டம், நினைவேந்தல் நிகழ்ச்சி, ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை கோவை மாநகரில் நடத்த திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் எந்தவித முறையான அனுமதியும் பெறாமல் தகவல் பரப்பி வருகின்றனர்.

இச்செயலானது கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதித்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் வகையிலும் உள்ளது.

கோவை மாநகரின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கும் விதமாகவும், தமிழக அரசின் கரோனா பெருந்தொற்று தடை உத்தரவு அமலில் உள்ளதாலும், வரும் 10-ம் தேதி வரை எந்தவொரு அரசியல் கட்சியினரோ, அமைப்பினரோ, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் உள்ளிட்ட எந்த வகையான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர்களும், சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x