Published : 28 Nov 2021 03:08 AM
Last Updated : 28 Nov 2021 03:08 AM

ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரையில் கடல் நீர் சாகச விளையாட்டு மையம் விரைவில் தொடக்கம்

பாம்பன் குந்துக்கால் கடல் பகுதியில் துடுப்புப் படகில் உலா வந்த சுற்றுலாப் பயணிகள் (கோப்பு படம்).

ராமேசுவரம்

ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் கடல் நீர் சாகச விளையாட்டு மையம் விரைவில் தொடங்கப்படஉள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 237 கி.மீ. நீளத்துக்கு கடற்கரை உள்ளது. ராமேசுவரம் கடலோரப் பகுதியில் தெற்கே மன்னார் வளைகுடா கடற்கரையும், வடக்கே பாக் ஜலசந்தி கடற்கரையும் நீர் சாகச விளையாட்டுப் போட்டிகள் நடத்த சிறந்த இடங்களாக உள்ளன.

கடந்த 50 ஆண்டுகளில் தனுஷ் கோடியிலிருந்து தலைமன்னார் வரையிலுமான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 14 பேர் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ராமேசுவரத்தில் சர்வதேச நீர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து ராமேசுவரம் கடலோரப் பகுதியில் நீர் சாகச விளையாட்டு மையம் தொடங்கினால் சுற்றுலா வளர்ச்சி மேம்படும். மீனவ இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

எனவே, இங்கு நீர் சாகச விளையாட்டு மையத்தை தொடங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் ராமேசுவரத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் பிரப்பன்வலசை கடற்கரைப் பகுதியில் சுற்றுலாத்துறையின் ஒருங்கிணைப்பில் கடல் நீர் சாகச விளையாட்டு மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் நேற்று ஆய்வு செய்தார்.

முதல் கட்டமாக பிரப்பன் வலசையில் நீச்சல், துடுப்புப் படகு, பெடல் படகு, அலைச் சறுக்கு உள்ளிட்ட கடல் நீர் சாகச விளையாட்டுகளுக்கான மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x