Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

கொடைக்கானலில் அமைகிறது ஹெலிகாப்டர் இறங்குதளம் : இந்திய வான்வழி போக்குவரத்து வல்லுனர் குழுவினர் ஆய்வு

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்த இந்திய வான்வழி போக்குவரத்து வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தமிழக அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும்விதமாக கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டரில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இப்பகுதியை ஆய்வு செய்ய இந்திய வான்வழிப் போக்குவரத்து துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர் குழுவினர் நேற்று கொடைக்கானல் வருகை தந்தனர்.

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி பெரும்பள்ளம், சின்னப்பள்ளம் பகுதியில் அமையவுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்கான இடம் போதுமானதாக உள்ளதா, பாதுகாப்பானதா, ஹெலிகாப்டர் இறங்குவதற்கு ஏதுவாக இறங்குதளத்துக்கு மேலே உள்ள வான்வெளி பரப்பு மரங்கள் இன்றி உள்ளதா என்பது குறித்தும் இந்திய வான்வழி போக்குவரத்து தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

குழுவில் இடம்பெற்ற சிவில் விமானப் போக்குவரத்து இணைப் பொதுமேலாளர் மார்கன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் 1.25 ஏக்கர் பரப்பளவில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க ஏதுவாக இந்த பகுதி உள்ளது. இங்கு மேற்கொள்ள உள்ள கட்டுமானப் பணிகள், மேம்பாட்டு வசதிகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு விரிவான அறிக்கை இருபது நாட்களில் தாக்கல் செய்யப்படும்.

இங்கு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைத்தால் நடுத்தர மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் அமையும், என்றார். ஆய்வின்போது வருவாய்த்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x