Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் - 27 கலைக்குழுக்கள் மூலம் கல்வி விழிப்புணர்வு : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த 27 கலைக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த கல்வியின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சார்பில் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு, பெற்றோர்கள், மாணவர்களுக்கு கல்வி கற்றலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் நேரடி கற்றல் வகுப்புகள் நடைபெறாமல் இருந்ததால், ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைத்து, 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை பள்ளிக்கு தொடர்ந்து வரவழைக்க, கலைக்குழுக்கள் மூலம் வட்டார அளவில் அனைத்து குடியிருப்புகளிலும் கலை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் ஒரு குழுவுக்கு 9 பேர் வீதம் 27 கலைக்குழுக்கள் மூலம், மாவட்டத்தின் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளன. இதன் மூலமாக மாணவர்கள் பள்ளிச் சூழலின் கீழ் ஏற்கெனவே பெற்றுள்ள கற்றல் திறனை மீண்டும் வலுப்படுத்தி, கற்றல் இழப்பு மற்றும் இடைநிற்றலை வெகுவாகக் குறைக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், 6 மாதம் தினமும் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் வரை மாலை நேரங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு, மாணவர்களின் குடியிருப்புகளிலேயே எளிய முறையில் கற்றல் வாய்ப்புகளை வழங்கி, அன்றாட கற்றல் செயல்பாடுகளில் படிப்படியாக பங்கேற்கச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலர் விஜயராகவன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சேலம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்றலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. மகுடஞ்சாவடி அடுத்த வைகுந்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x