Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல்? : கட்சி நிர்வாகிகள் குழப்பம்

மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு நேரடி தேர்தலா? மறைமுக தேர்தலா? என்பது முடிவுக்கு வராமல் இருப்பதால் கட்சி நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. கடைசியாக அதிமுக ஆட்சியில் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது நடந்த தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்பிறகு முதல்வராக கே.பழனிசாமி இருந்தபோது மறைமுகத் தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்தது. அதற்குள் கரோனா தொற்று பரவியதால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடக்கவில்லை.

தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலவரப்படி தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் நேரடி தேர்தல் நடைமுறையே இருக்கிறது.

ஆனால், இந்த நடை முறையை மாற்றி மறைமுக தேர்தல் கொண்டுவர திமுக அரசு முயற்சி செய்வதாகவும், இதற்கு திமுக நிர்வாகிகள் மத்தியிலே எதிர்ப்பும், ஆதரவும் இருப்பதால் கட்சி நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள் ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: மறைமுகத் தேர்தல் நடந்தால் கவுன்சிலர்களை நம்பி பணம் பெரியளவில் செலவு செய்தும், அவர்கள் கட்சி மாறி வாக்களித்தால் என்ன செய்வது என்று ஒரு தரப்பினர் தவிக்கின்றனர்.

அதனால் தற்போதுள்ள திமுகவின் செல்வாக்கால் நேரடியாக போட்டியிட்டே மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்கின்றனர்.

மற்றொரு தரப்பினர், கட்சித் தலைமை கூறினால் கவுன்சிலர்கள் கட்டுப்பாடாக வாக்களித்து தலைவர் பதவிகளை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என்று நினைக்கின்றனர்.

இரு தரப்பினரும் கட்சித் தலைமையிடம் தங்கள் கருத்துகளை கூற தொடங்கியிருக்கின்றனர். ஆனால் கட்சித் தலைமை எந்த முடிவுக்கும் வரவில்லை’’ என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x