Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இன்று : 879 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் :

ஈரோடு / நாமக்கல்: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இன்று 879 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே 10 கட்டமாக கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றன. 11-ம் கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (25-ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும்.

நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி செலுத்தப்படும். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் 88 முகாம்களும், பேரூராட்சிகளில் 68 முகாம்களும், 322 கிராம ஊராட்சிகளில் 290 மையங்கள் என மொத்தம் 442 முகாம்களில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தப்படும். இன்றைய முகாமில், 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 லட்சம் பேருக்கு ஊசி போட இலக்கு

ஈரோட்டில் இன்று நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (25-ம் தேதி) 437 மையங்களில், காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 11-வது கட்ட தடுப்பூசி முகாம் நடக்கிறது. இன்றைய முகாமில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் கோவி ஷீல்ட் தடுப்பூசி செலுத்தி 84 நாட்கள், கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் நிறைவடைந்தவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி போட உணவுக்கட்டுப்பாடு ஏதுமில்லை என்பதால் அச்சமின்றி தடுப்பூசி போடலாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x