Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் - திருப்பணியில் அரசியல் தலையீடு இல்லை : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ரூ.1.8 கோடி மதிப்பில் திருப்பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மண்டைக்காடு கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, திருக்கோயிலைஆய்வு செய்து திருப்பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. கோயிலில் தேவபிரசன்னம் பார்க்க வேண்டும் என்று பக்தர்கள் கூறினர். அதன்படி தேவபிரசன்னம் பார்க்கப்பட்டது. அதன்பின் மீண்டும் ஆய்வு செய்து மண்டலகுழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், மாநில குழுவுக்கு அனுப்பி வைத்தோம். அந்த குழுஒப்புதல் அளித்த பின்னர் தொல்லியல் துறையும், நீதிமன்றமும் இணைந்து குழு அமைத்திருக்கின்றன. இக்குழு ஒப்புதல் அளித்த பிறகே வரைபடம் தயாரித்து தேவையான ஏற்பாடுகளைச் செய்தோம். என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. தற்போது திருப்பணிகள் நடைபெறுவதற்கான பூஜைகள் நடந்துள்ளன.

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் பக்தர்கள் என்னென்ன பணிகளைச் செய்யவேண்டும் என விரும்புகிறார்களோ, அந்த அனைத்து பணிகளையும் அரசு செய்துதர தயாராக உள்ளது. அதேநேரம், நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அரசு தயாராக இருக்காது. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 2007-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஜூன் 6-ம்தேதி குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

மண்டைக்காடு கோயில் திருப்பணியில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை. முழுக்க முழுக்க ஆன்மிக ரீதியாக நடைபெறும் நிகழ்ச்சியாகும். எனவே, இந்து அறநிலையத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் அமைப்பினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இதைப்போல சுசீந்திரம் திருக்கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து, அங்குள்ள மூலிகை ஓவியங்களை பார்வையிட்டார். திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள்கோயிலிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், பிரின்ஸ்எம்எல்ஏ, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x