Last Updated : 25 Nov, 2021 03:14 AM

 

Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் : நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியதால் கலக்கத்தில் பணியாளர்கள்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள், கொள்முதல் நிலையத்திலேயே தேங்கிக்கிடக்கின்றன. இந்நிலையில், தற்போது பெய்துவரும் மழையால் நெல்மூட்டைகளில் உள்ள நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், தங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதால், கொள்முதல் நிலைய பணியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகங்களிலும் நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல்லை, தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 7.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சந்தை பருவத்தில் (அக்.1 முதல் செப்.30 வரை) 10.54 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து தற்போதைய சந்தைப் பருவத்தில் நேற்று வரை 1.95 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் முழுவதும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள அரிசி அரைவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 350 கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மாவட்டத்தில் உள்ள 5 நிரந்தர சேமிப்பு கிடங்குகள் மற்றும் 24 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து சேமிப்பு கிடங்குகளிலும் நெல்மூட்டைகள் அதிக அளவில் இருப்பதால், நவம்பர் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அந்தந்த கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளன.

போதிய பாதுகாப்பு இல்லாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளில் உள்ள நெல்மணிகள் அண்மையில் பெய்த தொடர்மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளன.

தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல், கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து சேதமடைந்தும், முளைவிட்டு வீணாகியும் வருவதை பார்த்து விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து கொள்முதல் பணியாளர்கள் கூறும்போது, ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சேமிப்பு கிடங்குகளிலும் நெல்மூட்டைகள் இருப்புவைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப முடியவில்லை.

கடந்தாண்டு எதிர்பார்த்ததை விட அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டாலும், இருப்புவைக்க இடமில்லாததாலும், நவம்பர் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அந்தந்த கொள்முதல் நிலையத்திலேயே இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இங்கு நெல்லை பாதுகாக்க போதிய வசதிகள் இல்லாததால், கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைகின்றன. இந்த மூட்டைகளில் உள்ள நெல்மணிகள் தற்போது முளைவிட தொடங்கியுள்ளன. இதனால் ஏற்படும் எடை இழப்பு, சேதாரம் ஆகியவற்றுக்கு கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் எங்களிடம் அபராதமாக வசூலிக்கப்படும் என்பதால் கலக்கத்தில் உள்ளோம்’’ என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நா.உமாமகேஸ்வரி கூறும்போது, ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் மாதந்தோறும் 45 ஆயிரம் டன் வெளி மாவட்டங்களுக்கு அரைவைக்கு அனுப்பப்படுகிறது. கடந்தாண்டை காட்டிலும் 50 சதவீதம் நெல் அதிகம் கொள்முதல் ஆனதால், தற்போது சேமிப்பு கிடங்குகளில் அதிகம் நெல் இருப்பு உள்ளது. தொடர் மழையால், லாரிகளை தொடர்ந்து இயக்க முடியவில்லை. எனினும் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை 5 நாட்களுக்குள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x