Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

மாடு மீது மோதி கவிழ்ந்த ஆம்புலன்ஸ் சிகிச்சைக்கு சென்ற நோயாளி மரணம் :

பாளையங்கோட்டையில் சாலை யில் திரிந்த மாடு மீது ஆம்புலன்ஸ் மோதியதில் அதிலிருந்த நோயாளி பலத்த காயமடைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி மாநகரில் சாலைகளில் மாடுகள் திரிவதால் அடுத்தடுத்து விபத்துகள் நேரிட்டு வருகின்றன. அவ்வாறு மாடுகளை திரியவிடும் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்தாலும், வழக்கம்போல் மாடுகள் சாலைகளிலும், வீதி களிலும் சுற்றித்திரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்துகளில் சிக்கும் அபாயம் நீடிக்கிறது. இந்நிலையில் மாடு மீது ஆம்புலன்ஸ் மோதி அதிலிருந்த நோயாளி மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது.

தென்காசி மாவட்டம் ஆய்குடி அருகே அகரகட்டு கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மனைவி லதா (33). உடல் நலக்குறைவால் திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப் பட்டிருந்த அவரை, திருநெல் வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்குமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி, நேற்று முன்தினம் இரவில் கொண்டு சென்றனர். லதாவின் தாய் செல்வி, தம்பி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

3 பேரும் பலத்த காயம்

பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே வந்தபோது, திடீரென்று சாலையில் குறுக்கே மாடு ஒன்று பாய்ந்தது. மாடு மீது ஆம்புலன்ஸ் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் லதா, செல்வி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். பின்னர், அவர்கள் 3 பேரும் வேறு ஆம்புலன்ஸில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி லதா நேற்று உயிரிழந்தார்.

திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x