Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

திருடனை துரத்திப் பிடித்த காவல் ஆய்வாளருக்கு முதல்வர் பாராட்டு :

கோவையில் இருசக்கர வாகனத் திருடனை துரத்திப்பிடித்த, சூலூர் காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 14-ம் தேதி அதிகாலை ஆய்வாளர் மாதையன் தலைமையில், காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகன திருட்டில் தொடர்புடைய இருவர், காவலர்களை கண்டதும் தப்பி ஓடினர். காவல் ஆய்வாளர் மாதையன், அவர்களை துரத்திச் சென்று பிடித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆய்வாளரின் இந்த துணிச்சல் மிக்க செயலுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோவைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்ஆய்வாளர் மாதையனை நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து, வாழ்த்து மடல் வழங்கினார். வாழ்த்து மடலில், ‘‘சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்கி, பொதுமக்களின் அமைதியான வாழ்கைக்குரிய சூழலை உறுதி செய்வதே காவல்துறையினரின் முதன்மைப் பணியாகும். அத்தகைய பணியை, திறம்படச் செய்யும் சீருடைப் பணியாளர்கள் மக்களின் உண்மை நாயகர்களாகி பெருமதிப்பை பெறுகிறார்கள். சூலூர் காவல் ஆய்வாளரான தாங்களும், காவலர்களும் சந்தேகத்துக்குரிய முறையில் சுற்றிய 2 பேரிடம் விசாரிக்க முயன்றபோது, தப்பிக்க முயன்ற அவர்களை தடுத்து சண்டையிட்டதில், சட்டை கிழிந்த நிலையிலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று, அவர்களில் ஒருவரை தாங்களும், காவலர்களும் பிடித்துள்ளீர்கள். அவரிடம் விசாரித்ததன் அடிப்படையில் மற்றொருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த திருட்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளீர்கள். திருடர்களை, தங்கள் உயிருக்கும் அஞ்சாமல் போராடி, சட்டத்தின் முன் நிறுத்தியதன் மூலம், மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளீர்கள். தங்களின் துணிச்சல் மிக்க செயல்பாடு, காவல்துறையில் உள்ள நேர்மையான துணிச்சலான அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும். தங்களது வீர, தீரச் செயலுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x