Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

புதிய தொழில்களை தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை : முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

வளர்ந்துவரும் புதிய தொழில்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழக தொழில் துறை சார்பில் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் தமிழகத்தில் கோடிக்கணக்கான அளவில் தொழில் முதலீடுகள் தொடர்ந்து ஈர்க்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பாரம்பரியமாக ஜவுளித் தொழில், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளன. அவற்றின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதோடு, ‘எமர்ஜிங் செக்டார்’ எனப்படும் வளர்ந்துவரும் புதிய தொழில்கள், தொழில் நுட்பங்கள் அனைத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘மேக் இன் தமிழ்நாடு’ எனக் கூறும் சூழலைத் தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். அனைத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையாக தமிழக முதல்வர் உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் லண்டன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்கள், உணவுப் பொருட்கள், நூற்பாலைகள், ஜவுளி, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, இருசக்கர வாகன உற்பத்தி, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மின்சார வாகன தயாரிப்பு சிமெண்ட் உற்பத்தி, வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றில் மொத்தம் ரூ.35,208 கோடி முதலீட்டில் 76,795 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டன.

13 திட்டங்களுக்கு அடிக்கல்

தவிர, ரூ.13,413 கோடி முதலீட்டில் 11,681 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் தகவல் தரவு மையம், ட்ரோன்கள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட 13 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மொத்தம் ரூ.3,928 கோடி முதலீட்டில் 3,944 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் தொழிற்பூங்கா, மின்சார இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு உள்ளிட்ட 10 திட்டங்களின் வணிக உற்பத்தியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்த முதலீடுகள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி ஆகிய 22 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.

‘மேக் இன் தமிழ்நாடு’ கண்காட்சி

முன்னதாக, கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மேக் இன் தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பக் கருவிகள் கண்காட்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில், தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கர்னி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x