Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

தண்டவாள சீரமைப்பு பணி 2 நாட்களில் முடியும் : கனமழையால் 14 விரைவு ரயில்கள் ரத்து

கனமழை பெய்து வரும் நிலையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 14 விரைவு ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. பாதிப்பு உள்ளான இடங்களில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் 2 நாட்களில் முடியும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பருவமழை தீவிரமடைந்து, தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லும் 100-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

குறிப்பாக, ரேணிகுண்டா, நெல்லூர், சூலூர்பேட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னை சென்ட்ரல்- பித்ரகுண்டா (எண்.17237/17238), அகமதாபாத்-சென்னை சென்ட்ரல் (12655), சென்னை சென்ட்ரல்-திருப்பதி (16053/16058) உள்ளிட்ட 14 ரயில்களின் சேவை நேற்றும் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உடனுக்குடன் சீரமைப்புப் பணிகள் முடித்து, மீண்டும் ரயில்களை இயக்கி வருகிறோம். நாகர்கோவில்-கன்னியாகுமரி பகுதியில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆந்திராவில் ரயில் தண்டவாளங்கள், மேம்பாலங்களில் சீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த 2 நாட்களில் இந்தப் பணிகளை நிறைவு செய்து, மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x