Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக - கோயில் கணக்குகளை தணிக்கை செய்யாத அறநிலையத் துறை : ஒரு உதவியாளருடன் இயங்கும் கோயில் தணிக்கைப் பிரிவு

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் கணக்குகளை அரசு தணிக்கை செய்யாத அவலம் நீடிக்கிறது.

புதுச்சேரியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 243 கோயில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இதன்மூலம் வரும் வருமானம் மற்றும் கோயில் உண்டியல்கள் மூலம் வரும் வருமானம் ஆகியவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்ய கணக்கு மற்றும் கருவூலத்துறையில் கோயில் தணிக்கை பிரிவு செயல்பட்டு வருகிறது.

கோயில்கள் தணிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்து தகவல் கேட்டபோது, 10 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது தெரியவந்தது.

இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோருக்கு, ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

கோயில் தணிக்கைப் பிரிவில் ஒரேயொரு உதவியாளர் மட்டுமே பணியில் உள்ளார். ஒரு கண்காணிப்பாளர், இரண்டு உதவியாளர்கள், ஒரு மேனிலை எழுத்தர், ஒரு பல்நோக்கு உதவியாளர் பணி இடங்கள் காலியாக உள்ளன. அதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில்களில் எதுவும் தணிக்கைக்கு உட்படுத்தவில்லை என்று ஆர்டிஐயில் தகவல்கள் தந்துள்ளனர்.

பல கோடி ரூபாய் செலவு செய்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட மணக்குள விநாயகர், நிவாச பெருமாள், வேதபுரீஸ்வரர், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், வரதராஜ பெருமாள், காசிவிஸ்வநாதர் ஆகிய கோயில்களுக்கான கும்பாபிஷேக வரவு - செலவு கணக்கைக்கூட பல ஆண்டுகளாக அரசு தணிக்கை செய்யவில்லை. ஏற்கெனவே தணிக்கை செய்த வகையில் அரசுக்கு ரூ.32,95,115 நிலுவைத் தொகை கோயில்கள் செலுத்தாமல் உள்ளன. குறிப்பாக மணக்குள விநாயகர் கோயில் ரூ.14,54,782 நிலுவைத் தொகை வைத்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையினர் கோயில்களின் பல கோடி ரூபாய் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை எதைப் பற்றியும் கவலைப்படாமல் உள்ளதுபோல் தெரிகிறது.

புதுச்சேரியில் உள்ள கோயில்கள் அனைத்திற்கும் பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள நிலையிலும், இவை அனைத்தும் அரசியல் பின்பலம் உள்ள நபர்கள் வசம் மிகக் குறைந்த வாடகைக்கு உள்ளது. பல இடங்கள் கோயில் நிர்வாகத்திற்கே தெரியாமல் பலரது பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு உள்ள கோயில்கள் மற்றும் பல ஆண்டுகளாக ஒருவரே தொடர்ந்து நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வரும் கோயில்கள் ஆகியவற்றில் தான் அதிகளவில் முறைகேடுகள் நடைபெறுள்ளன. இதற்கு கோயில் தணிக்கை பிரிவு ஆண்டுதோறும் தணிக்கை செய்யாததே முக்கிய காரணமாகும். எனவே கோயில் தணிக்கை பிரிவுக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து கோயில் வரவு - செலவுகளை தணிக்கை செய்து முறைகேடுகளை கண்டறிய வேண்டும். கோயில் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்க வேண்டும். கோயில்களில் உள்ள அறங்காவலர் குழுவினரை ரத்து செய்துவிட்டு, சிறப்பு அதிகாரிகளை நியமித்து கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், தமிழகத்தை பின்பற்றி கோயில் நிர்வாகங்களை சீர்திருத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர், முதல்வரிடம் மனு அளித்துள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x