Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

பாரபட்சமின்றி பயிர்க் காப்பீடு இழப்பீட்டை வழங்க வேண்டும் : தஞ்சாவூர் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

கடந்தாண்டு சம்பா சாகுபடியின்போது, பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என தஞ்சை ஆட்சியரிடம் நேற்று விவசாயிகள்முறையிட்டனர்.

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இதில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 553 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் காசாவளநாடு புதூர் விவசாயிகள் அளித்த மனுவில் ‘‘எங்களது பகுதியில் கடந்த சம்பா பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர் தொடர் மழையால் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது. சம்பா பருவத்துக்கு பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தியிருந்தோம். ஆனால், அதற்கான இழப்பீட்டுத் தொகை எங்களது கிராமத்தில் முழுமையாக வழங்காமல், ஒருசில விவசாயிகளுக்கு மட்டும் வழங்கி பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. எனவே, பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தனர்.

தஞ்சாவூர் அருகே ஆலக்குடி காமாட்சிபுரம் புதுமனைத் தெருவைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ‘‘எங்களது பகுதியில் மூன்று தலைமுறையாக குடிநீர், கழிப்பறை, தெரு விளக்கு என எந்த வசதியும் இல்லாமல் அவதிப்படுகிறோம். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற வந்துள்ளோம்’’ என தெரிவித்தனர். அவர்களை போலீஸார் தடுத்ததால், அனைவரும் ஆட்சியர் அலுவலகம் எதிரே தரையில் அமர்ந்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் சமாதானம் செய்து, பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க ஏற்பாடுகள் செய்தனர். மனுவை பெற்றுக்கொண்ட, ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x