Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் : மத்திய குழுவினர் இன்று நேரில் ஆய்வு :

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் 101 கி.மீ சாலைகள், 687 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் கடந்த வாரம் முழுவதும் பரவலான கன மழை பதிவானது. பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பாலாறு அணைக்கட்டில் இருந்து 163 ஆண்டுகள் வரலாற்றில் உச்சபட்ச அளவாக 1.04 லட்சம் கன அடி அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டோடியது. மாவட்டத்தின் தாழ்வானப் பகுதிகளில் வெள்ளக்காடாக மாறின.

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். 9 கால்நடைகள், 14 ஆயிரத்து 800 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளன. மழைக்கால நிவாரண முகாம்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். 528 வீடுகள் பகுதியாகவும், 67 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் மொத்தம் 2.32 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தொடர் மழையால் 101 ஏரிகளில் 79 ஏரிகள் முழுமைாக நிரம்பியுள்ளன. மொத்தமுள்ள ஏரிகளில் 2.02 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாவட்டம் முழுவதும் 68 இடங்களில் 101.08 கி.மீ சாலைகள் சேதமடைந்துள்ளன. 16 தரைப்பாலங்கள், சிறுபாலங்கள், 30 ஏரி, குளங்கள், ஊரணிகள் சேமதடைந்துள்ளன. 9 மேல்நிலை குடிநீர் தொட்டிகள், 38 ஆழ்துளைக் கிணறுகள், 16,457 மீட்டர் தொலைவுக்கு குடிநீர் குழாய்கள், 18 திறந்தவெளி கிணறுகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் நெற் பயிர்களுடன் தோட்டக்கலை பயிர்கள் என மொத்தம் 687.12 ஹெக்டேர் அளவுக்கு சேதமடைந்துள்ளன.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்புகளை மத்தியக் குழுவினர் இன்று பிற்பகல் ஆய்வு செய்யவுள்ளனர். மத்திய நிதியமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையில் மத்திய நீர்வள ஆதார முகமையின் இயக்குநர் தங்கமணி மற்றும் பவ்யா பாண்டே ஆகியோருடன் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு மின் ஆளுமை நிர்வாக இணை இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்கின்றனர். அப்போது, வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் சேத விவரங்களை எடுத்துரைப்பதுடன் கள ஆய்விலும் ஈடுபட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x