Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

ரூ.44.30 கோடியில் காவல்துறை கட்டிடம் திறப்பு - தடய அறிவியல் துறைக்காக ‘மரபணு தேடல் மென்பொருள்’ : முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ்நாடு தடய அறிவியல் துறையால் நாட்டில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள ‘தடய மரபணு தேடல் மென்பொருளை’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு, காவல்துறை கட்டிடங்களையும் திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் டிஎன்ஏ பிரிவில் தடய மரபணுதேடல் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் மாநிலம்

இதன்மூலம் இத்தொழில்நுட்பத்தை நாட்டில் அறிமுகப்படுத்துவதில் முதல் மாநிலமாக தமிழகம்திகழ்கிறது. இந்த தேடல் மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இப்புதிய தடய மரபணு தேடல் மென்பொருள் மூலமாக, கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை மரபணு ஒப்பீடு ஆய்வு மூலம் உரிய பெற்றோருடன் ஒப்படைத்தல், மாநிலங்களுக்கு இடையில் செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பை கண்டறிதல், கரையோரம் ஒதுங்கும் அடையாளம் தெரியாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணுதல், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிதல், இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களை கண்டறிதல் போன்ற பணிகளை எளிதாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள முடியும்.

கட்டிடங்கள் திறப்பு

மேலும், உள்துறை சார்பில் ரூ.44 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 270 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், 2 காவல்துறை கட்டிடங்கள், 6 உதவி சிறை அலுவலர் குடியிருப்புகள் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, ராஜகண்ணப்பன், தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், சிறைத் துறை இயக்குநர் சுனில்குமார் சிங், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x