Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM

காசிமேட்டில் படகுகளின் சேதத்தை மதிப்பிட அதிகாரிகள் குழு அமைப்பு : மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தென் மேற்கு வங்கக்கடலில் அண்மையில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

அப்போது, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. ஒரு சில படகுகள் தண்ணீரில் மூழ்கின.

பாதிக்கப்பட்ட படகுகளை ஆய்வு செய்து உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதை தொடர்ந்து, மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் படகுகளை நேரில் ஆய்வு செய்து சேத மதிப்பீடுகளை ஆய்வுசெய்து தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அரசுக்கு அறிக்கை

இந்நிலையில், மீன்வளத் துறை இணை ஆணையர் தலைமையில் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினரின் மூலம் படகுகளின் சேதங்களை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சேதமடைந்த படகுகளை கள ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய இணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமதடைந்த படகுகளை ஆய்வு செய்யும் பணியை தொடங்கிவிட்டனர். சேதங்கள் மதிப்பிட்ட பிறகு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க உள்ளோம். அதன் பிறகு, நிவாரணம் அளிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x