Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM

சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் - 153 இளம் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு :

ராணுவத்தில் பணியாற்ற, தேர்வு செய்யப்பட்ட 153 அதிகாரிகளுக்கு சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் கடந்த 11 மாதமாக பயிற்சி அளிக்கப்பட்டது. 124 ஆண்கள், 29 பெண்கள், 16 வெளிநாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி பெற்றனர். பயிற்சியை நிறைவு செய்த ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி பரங்கிமலை ராணுவ பயிற்சி அகாடமியில் நேற்று நடைபெற்றது.

இந்தியா ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சி.பி மொஹந்தி, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

தற்போதுள்ள சூழ்நிலையில் போர் முறைகள் பன்முகத் தன்மை கொண்டதாக மாறியுள்ளன. எனவே வீரர்கள் தொழில்நுட்பத்தில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் நுட்பத்துடன் கூடிய திறமையே எதிர்காலத்தில் தேவையாக உள்ளது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் இருந்தாலும் அதை இயக்குவது மனிதர்கள்தான். அதனால் தொழில்நுட்பத்தில் நன்கு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்திய ராணுவத்தின் புகழ்பெற்ற பாரம்பரியங்களையும் நீங்கள் நிலைநிறுத்துவீர்கள் என்று தேசம் உங்களை எதிர்பார்க்கிறது. உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.

பயிற்சியின்போது அனைத்து பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்த சித்தாந்த் சர்மாவுக்கு வீரவாள் மற்றும் தங்கப்பதக்கத்தையும், டிம்புள் சிங்குக்கு வெள்ளி பதக்கத்தையும், முனீஷ்குமாருக்கு வெண்கல பதக்கத்தையும் லெப்டினென்ட் ஜெனரல் சி.பி மொஹந்தி வழங்கினார்.

பயிற்சியை நிறைவு செய்த ராணுவ இளம் அதிகாரிகளுக்கு பணி நிறைவு தகுதியை குறிக்கும் விதமாக நட்சத்திர பட்டயம் தோள்பட்டையில் அணிவிக்கப்பட்டபோது அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர் பலரும் இந்த நிறைவு விழாவில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x