Published : 20 Nov 2021 03:08 AM
Last Updated : 20 Nov 2021 03:08 AM

தமிழக அரசின் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் - 20 மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் :

திருவண்ணாமலை

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் உலக பிரசித்திப் பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் 14கி.மீ. தொலைவு கிரிவலம் சென்று, அண்ணாமலையாரை தரிசிக்கின்றனர்.

இந்நிலையில், கரோனா ஊடரங்கு காரணமாக 2020 பங்குனி மாதம் முதன்முறையாக கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீடித்தது. கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையிலும், பவுர்ணமி கிரிவலத்துக்கான தடையை நீக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. இருப்பினும் தடையை மீறி, இந்தாண்டு தொடக்கத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு 2-வது ஆண்டாக இந்தாண்டும் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2 நாட்களுக்கு தலா 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, 20 மாதங்களுக்கு பிறகு, பவுர்ணமி நாளான நேற்று இரவு முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

இதற்கிடையில், நவம்பர் 19 மற்றும் 20-ம் தேதி கிரிவலம் செல்வதற்கு www.arunachaleswarartemple.tnnrce.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு மக்களை சென்றடைவதற்கு முன்பாக கிரிவலம் செல்லும் பக்தர்களின் வருகை நேற்று காலை அதிகரித்தது.

அவர்களை, நகரம் மற்றும் கிரிவலம் செல்லும் பாதையில் தடுத்து நிறுத்தி, இணையதள முன்பதிவு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது பக்தர்கள், முன்பதிவு அறிவிப்பு என்பது தங்களுக்கு தெரியாது என எடுத்துரைத்து, தங்களை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர், அவர்களை பகுதி பகுதியாக பிரித்து கிரிவலம் செல்ல போலீஸார் அனுமதித்தனர். மழையும் இல்லாததால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

அப்போது அவர்கள், ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரத்தை உச்சரித்தப்படி, அண்ணாமலையாரை வழிபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x