Published : 19 Nov 2021 03:10 AM
Last Updated : 19 Nov 2021 03:10 AM

இந்து, இஸ்லாமிய மதங்களை இணைத்த திராவிட கட்டிடக்கலை : நவம்பர் 19-25 உலகப் பாரம்பரிய வாரம்

வே. ராஜகுரு

ராமேசுவரம்

பாரம்பரியப் பெருமை கொண்ட கோயில்களும், பள்ளிவாசல்களும் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த கட்டிடக் கலையைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மனித நாகரிகம் அது தோன்றிய காலம் முதல் உணவு, உடை, வாழ்விடம், வழிபாடு, மருத்துவம், கல்வி ஆகியவற்றில் பாரம்பரியச் சிறப்புடன் விளங்கி உள்ளது. அத்தகைய சிறப்புகளை அடுத்த தலைமுறையினர் அறிந்து பயன்படுத்தவும், பாரம்பரியச் சின்னங்களை போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை அவர்களிடம் உருவாக்கவும் ஆண்டுதோறும் நவம்பர் 19 முதல் 25 வரை உலகப் பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் திராவிடக் கட்டிடக் கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் அநேக கடற்கரை கிராமங்களில் இஸ்லாமியர் பெருமளவில் வாழ்கிறார்கள். திருப்புல்லாணி கோயிலில் உள்ள கி.பி.1247-ம் ஆண்டைச் சேர்ந்த, இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு, கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டினத்தில் உள்ள பிழார் என்ற இஸ்லாமியர்களின் பள்ளிவாசலுக்கு ஆம்பத்தூர், மருதூர் ஆகிய ஊர்கள் தானமாக வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. வைணவக் கோயிலில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசலுக்கு கொடை வழங்கிய கல்வெட்டு இருப்பதன் மூலம் அக்காலத்திலேயே மத நல்லிணக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

கீழக்கரை பள்ளிவாசலில் உள்ள கி.பி.1300-ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண்மணியின் கல்லறைக் கல்வெட்டு மூலம் இவ்வூரில் கி.பி.12-ம் நூற்றாண்டுகளிலேயே இஸ்லாமியர்கள் குடியிருந்ததையும், பள்ளிவாசல் இருந்ததையும் அறிய முடிகிறது. வட்டானம் மற்றும் வாலிநோக்கத்தில் கி.பி.15-ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியப் பள்ளி இருந்ததை அங்குள்ள கல்லறைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

திராவிட கட்டிடக் கலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரைப் பாறைகளையே கோயில்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். கீழக்கரை, வேதாளை, வாலிநோக்கம், நரிப்பையூர் உள்ளிட்ட பள்ளிவாசல்களும் கடற்கரைப் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட மணற்பாறைகளைக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. கோயில்கள் கட்டப் பயன்படுத்திய திராவிடக் கட்டிடக் கலையையே பள்ளிவாசல்கள் கட்டவும் பயன்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான பழமையான பள்ளிவாசல்கள் தொழும் மாடம், மகாமண்டபம், முன்மண்டபம், தாழ்வாரம் என்ற அமைப்பில் காணப்படுகின்றன. இவற்றின் வெளிப்புறத்தில் அதிஷ்டானம், பாதசுவர், பிரஸ்தரம் ஆகிய அமைப்பு காணப்படுகிறது.

தூண்களிலும், மேற்கூரையிலும் பலவிதமான பூக்களின் உருவங்கள் கோட்டுருவங்களாகவும், புடைப்புச் சிற்பங்களாகவும் வெட்டப்பட்டிருக்கும். கீழக்கரை, வேதாளை, நரிப்பையூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள் திராவிட கட்டிடக் கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளன.

கீழக்கரையின் சில பள்ளிவாசல்களில் உள்ள தூண்கள் வெட்டுப் போதிகை, தாமரைப்பூ, வாழைப்பூ போதிகைகளோடு கூட்டுத்தூண்களாக கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பிற்காலப் பாண்டியர், சேதுபதி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கல்லுப்பள்ளிகளும் உள்ளன. அவற்றின் தூண்கள், போதிகைகள், கொடுங்கைகள் மூலம் அவற்றின் கலைப்பாணியை அறிய முடிகிறது. அதே காலகட்டத்தில் கட்டப்பட்ட ராமேசுவரம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை கோயில் தூண்களும் இதுபோலவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x