Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

கரோனா கட்டுப்பாடுகள் நவ. 30-ம் தேதி வரை நீட்டிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை

கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர்நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று (நவ. 15) காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடியஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகளை வரும் 30-ம் தேதி வரை தொடர்ந்து அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 28-ம் தேதி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்துவரும்நிலையில், மழைக் காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவவாய்ப்புள்ளதைக் கருத்தில்கொண் டும், பொதுமக்களின் நலனைக் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

மாநிலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் ஏற்கெனவே உள்ள வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிதல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல் மற்றும் கரோனாநோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் ஆகிய வழிமுறைகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

அதேபோல, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக் கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தவறாது 2-வது தவணை தடுப்பூசியை உரிய காலத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் நோய்த் தொற்று அறிகுறி தென்பட்டவுடன், உடனேஅருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறவேண்டும்.

மழைக்காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி, தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி,அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன், ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டும். இடி,மின்னல் ஏற்படும்போது பின்பற்றவேண்டிய வழிகாட்டு நடைமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

மழைக்காலங்களில் தண்ணீர் தொடர்பான நோய்கள் எளிதில் பரவும் என்பதால், பொதுமக்கள் காய்ச்சிய நீரையே குடிக்க வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, கரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவ வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x