Last Updated : 14 Nov, 2021 03:08 AM

 

Published : 14 Nov 2021 03:08 AM
Last Updated : 14 Nov 2021 03:08 AM

திருச்சி மாவட்டத்தில் முன்கூட்டியே தொடங்கிய அரசு நடைமுறைகள் - ஜல்லிக்கட்டு நடத்த 31 கிராமங்கள் மனு : ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு 31 கிராமங்கள் விருப்ப மனு அளித்துள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல், வருவாய்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நடத்தப்படுகிறது. ஆனால் இவற்றில் பல கிராமத்தினர் கடைசி நேரத்தில் மனு அளிப்பதால், உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டை நடத்துவதில் மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

இதைத் தவிர்ப்பதற்காக வரும் 2022-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராமங்கள், அதுதொடர்பாக முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என அண்மையில் ஆட்சியர் சு.சிவராசு அறிவித்திருந்தார். அதன்படி நவல்பட்டு, நடராஜபுரம், பீமநகர், அதவத்தூர், எல்.அபிஷேகபுரம், தெற்கு ஈச்சம்பட்டி, ஆலம்பாக்கம் ஆகிய கிராமங்கள் ஏதேனும் ஒரு தேதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளன.

இதேபோல நவலூர் குட்டப்பட்டில் ஜன.15 அல்லது 16 அல்லது 18, ஆவரங்காடு, ஆ.கலிங்கப்பட்டியில் ஜன.16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த விருப்பம் தெரிவித்து மனு அளிக் கப்பட்டுள்ளது. இதேபோல ஜன.19-ம் தேதி கூத்தைப்பார், ஜன.23-ம் தேதி ஆலந்தூர், ஜன.30-ம் தேதி கருங்குளம், நடு இருங்களூர், பிப்.6-ம் தேதி பெரிய அணைக்கரைப்பட்டி, பிப்.13-ம் தேதி மஞ்சம்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், பிப்.27-ம் தேதி செவலூர் பெஸ்டோ நகர், மார்ச் 1-ம் தேதி கல்லக்குடி, மார்ச் 14-ம் தேதி கரடிப்பட்டி, மார்ச் 16-ம் தேதி கே.உடையாபட்டி, மார்ச் 20-ம் தேதி சோபனபுரம், கீழ அன்பில், ஏப். 24-ம் தேதி மாகாளிக்குடி, மே.6-ம் தேதி துவாக்குடி, மே 8-ம் தேதி தெற்கு காட்டூர், மே 15-ம் தேதி மேட்டு இருங்களூர், கோவாண்டக்குறிச்சி, மே.26-ம் தேதி பழையபாளையம் ஆகிய கிராமங்கள் ஜல்லிக்கட்டு நடத்த மனு அளித்துள்ளன.

மேலும், ஏப். 14, 15, 17 ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேதியில் நடத்த வேங்கூர், ஏப்ரல் மாதத்தில் ஏதேனும் ஒரு தேதியில் நடத்த அரசங்குடி ஆகிய கிராமங்கள் விண்ணப்பித்துள்ளன.

விருப்ப மனு அளித்துள்ள இந்த 31 கிராமங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன், எஸ்.பி பா.மூர்த்தி மற்றும் ரங்கம், திருச்சி, லால்குடி, முசிறி கோட்டாட்சியர்களுக்கு ஆட்சியர் சு.சிவராசு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட டிஎஸ்பிக்கள், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவிடம் கேட்டபோது, ‘‘அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், அதற்கென நடவடிக்கைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டு விட்டன. விருப்ப மனு அளித்துள்ள கிராமங்களில் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது குறித்து அந்தந்த கோட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறும் கிராமங்கள், அவர்களுக்கான தேதி குறித்து அறிவிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x