Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பாக - கேரளாவுடன் தமிழகம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள மாநிலத்துடன் தமிழகம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரள சட்டப்பேரவையில், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது குறித்த உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு, அம்மாநில நீர்வளத் துறை அமைச்சரின் சார்பில் விடையளித்துப் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி, “முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது குறித்து தமிழக அரசுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், அவை தோல்வியடைந்து விட்டன. தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் தமிழகம்-கேரள முதல்வர்களிடையே புதிய அணை கட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக, கடந்த காலங்களில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை நடந்ததா என்று தெரியவில்லை. அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தால், அது பெரும் தவறாகும்.

அதுமட்டுமின்றி, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது குறித்து பேச கேரள அரசிடமிருந்து அழைப்பு வந்தால், அதை தமிழகம் ஏற்கக் கூடாது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்துக்கு எப்போதெல்லாம் பின்னடைவு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் புதிய அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வரும்படி தமிழகத்துக்கு அழைப்பு விடுப்பதை கேரள மாநில அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்துக்கு ஏற்கெனவே தீர்வு காணப்பட்டுவிட்டது. இத்தகைய சூழலில், முல்லை பெரியாறு சிக்கலுக்கு மீண்டும் உயிரூட்டவே கேரளா இப்போது பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கிறது. இந்த உண்மையை தமிழக அரசு உணர வேண்டும்.

புதிய அணை குறித்து தமிழகத்தை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதன்மூலம், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதை தடுக்கவும், புதிய அணை குறித்த விவாதங்களுக்கு புத்துயிரூட்டவும் கேரளம் துடிக்கிறது. இதற்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்துவிடக்கூடாது.

எனவே, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது உள்ளிட்ட எந்த சிக்கல் குறித்தும், கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. பேபி அணையை வலுப்படுத்தி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x