Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மற்றும் நடிகை கங்கணா ரனாவத், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்ட 118 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
அதேபோல 2021-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன. இதில், மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
கலை, அறிவியல், இலக்கியம், கல்வி, மருத்துவம், பொறியியல், தொழில், சமூகப் பணி, விளையாட்டு என பல்வேறு துறைகளில் உயர்ந்து விளங்குவோருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இது, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம என 3 பிரிவுகளாக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தின்போது இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்பிறகு மற்றொரு நாளில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில், பத்ம விருதுகள் வழங்கப்படும்.
கரோனா பேரிடர் காரணமாக 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே, 2021-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்தது. மொத்தம் 118 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
மறைந்த முன்னாள் அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சார்பில் அவரது மகளும், ஜார்ஜ் பெர்னாண்டஸ் சார்பில் அவரது மனைவியும் விருதை பெற்றுக்கொண்டனர். அருண் ஜேட்லி சார்பில் அவரது மனைவி விருதை பெற்றுக்கொண்டார்.
பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு னிவாசன், கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், முன்னாள் ஆளுநர் எஸ்.சி.ஜமீர், தொழி லதிபர் ஆனந்த் கோபால் மகிந்திரா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
நடிகை கங்கனா ரனாவத், பின்னணிப் பாடகர் அட்னான் சாமி, இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி, திரைப்பட இயக்குநர் கரண் ஜோகர், ம.பி.யின் மகப்பேறு மருத்துவர் லீலா ஜோஷி, பாலாஜி டெலிபிலிம்ஸ் நிர்வாக இயக்குநர் ஏக்தா ரவி கபூர், புதுச்சேரியைச் சேர்ந்த டெரகோட்டா கலைஞர் முனுசாமி உள்ளிட்டோருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது.
விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பத்ம பூஷண் விருது பெற்ற பி.வி.சிந்து கூறும்போது, ‘‘இதுபோன்ற விருதுகள் எதிர்காலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும்" என்றார்.
இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று வழங்கப்பட உள்ளது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT