Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM

அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் அமைகிறது - ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் : விதிகளைப் பின்பற்றி அமைக்க தமிழக அரசு அனுமதி

சென்னை

அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. விதிகளை பின்பற்றி நினைவிடத்தை அமைக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வரும், திமுகதலைவருமான கருணாநிதி, 2018-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார் அவரது உடல், மெரினாகடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம்செய்யப்பட்டது. அந்த இடத்தில்,நினைவிடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அறிக்கை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும் வருங்காலத் தலைமுறையும் அறியும் வகையில், நவீன விளக்கப் படங்களுடன் அண்ணா நினைவிடவளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பில்ரூ.39 கோடி மதிப்பில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

இதையடுத்து செப்.28-ம் தேதிமுதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித் துறை,நகராட்சி நிர்வாகம், சுற்றுச்சூழல், வீட்டுவசதித் துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டத்துறை செயலர் ஆகியோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான அனுமதிவழங்கி தீர்மானம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது. நினைவிட கட்டுமானத்துக்கான வளர்ச்சித் திட்டத்தை அரசுக்கு வழங்க சென்னைபெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உத்தரவிடப்பட்டது. மேலும்,சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம், கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அண்ணா நினைவிடத்தின் தற்போதைய கட்டமைப்புக்குள் உள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதுதவிர, அண்ணா நினைவிடத்தை விரிவுபடுத்தி முன்நுழைவு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க ஒத்துழைப்பு அளிக்க மாவட்ட ஆட்சியருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

இவற்றை தொடர்ந்து, கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, பல துறைகளுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளை உறுதி செய்து,நினைவிடம் அமைக்கும் பணிகளை சட்ட விதிகளை பின்பற்றிமேறகொள்ளும்படி பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளரை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்டதுறைகளின் முன்மொழிவுகளை பெற்று அரசுக்கு கருத்துரு அளிக்க செய்தித்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x